உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதல் இடம்

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக தமிழகம் முதல் இடத்தில் உள்ளது என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதல் இடம்
Published on

திண்டுக்கல்,

தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் 31-வது ஆண்டு விழா, மே தினம், மகளிர் தினம் என முப்பெரும் விழா திண்டுக்கல்லில் நடந்தது. இதற்கு சங்க மாநில தலைவர் நிர்மலா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பாப்பா முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் பத்மாவதி வரவேற்றார். இந்த விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒரு நபர் குழு, சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டும். வீட்டு வாடகைப்படியை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசை போல சீருடை, சலவை, ரேஷன் மற்றும் செவிலியர் படி வழங்க வேண்டும். சேதமடைந்துள்ள குடியிருப்புகளுக்கு வாடகைப்படி பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும். 3 கட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும். மாவட்ட தாய், சேய் நல அலுவலர் பணியிடத்தை, பணி மூப்பின் அடிப்படையில் வழங்க வேண்டும்.

பாலியல் தொல்லையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் புகார் குறித்து நேர்மையாக விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகளிர் தினத்தை மத்திய, மாநில அரசுகள் விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும். ஒப்பந்த பணியாளர் நியமனத்தை கைவிட வேண்டும். பொதுசுகாதார துறையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் துணை தலைவர்கள் அந்தோணியம்மாள், தேன்மொழி, அமைப்பு செயலாளர் இருதயமேரி, பிரசார செயலாளர் மரியசெல்வம் உள்பட ஏராள மானோர்கலந்துகொண்டனர்.

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், கிராம செவிலியர்களின் கோரிக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் முதல்-அமைச்சர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது, தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்க அதிக அளவு பணம் செலவாகிறது. மேலும் அங்கு ஆபரேஷன் மூலமே அதிகமான குழந்தைகள் பிறக்கும் நிலை உள்ளது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் தொடர்ந்து 4 ஆண்டுகளாக முதல் இடத்தில் உள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறையில், லஞ்சம் வாங்காமல் தகுதித்தேர்வு மூலம் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன .

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய். எதிர்பாராதவிதமாக ஒரு சம்பவம் நடந்துவிட்டது. இனி அதுபோல எந்த சம்பவங்களும் நடக்காமல் பார்த்துக்கொள்ளப்படும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பரமசிவம் எம்.எல்.ஏ., முன்னாள் மேயர் மருதராஜ் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com