

பவுண்டரி வேலை நிறுத்தம்
மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தக்கோரி கோவை யில் உள்ள 400 பவுண்டரி தொழிற்கூடங்கள் கடந்த 16-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.30 கோடி வீதம் நேற்று வரை 4 நாட்களுக்கு ரூ.120 கோடி வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் வேலை நிறுத்தத்தை வரும் 21-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் தற்காலிகமாக விலக்கி கொள்வது என பவுண்டரி தொழிற்கூடங்கள் முடிவு செய்துள்ளன.
இது குறித்து கோவை குறு, சிறு பவுண்டரி அதிபர்கள் சங்க தலைவர் சிவசண்முககுமார் கூறியதாவது:-
நாளை முதல் இயங்கும்
பவுண்டரி தொழிற்கூடங்களுக்கு தேவையான பிக் அயர்ன், ஸ்கிராப், நிலக்கரி உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை 30 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தது. இதனால் பவுண்டரி தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டது. எனவே தவிர்க்க முடியாத சூழல் காரணமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம்.
இதற்கிடையே நாளை (திங்கட்கிழமை) முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக்கொள்வது என்று சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக முடிவெடுத்துள்ளோம்.
விலை ஏற்றம்
வேலைநிறுத்தம் காரணமாக பவுண்டரி தொழிலை சார்ந்துள்ள வெட்கிரைண்டர், பம்பு, மோட்டார், டெக்ஸ்டைல் மற்றும் பிற பொறியியல் தொழில்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பவுண்டரி தொழிலின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தை புரிந்து கொண்டுள்ளனர். பொருட்களின் விலை உயர்வுக்கு ஏற்றவாறு விலை அளிப்பதாக வாடிக்கையாளர்கள் உறுதி அளித்துள்ளனர்.
மேலும் மத்திய, மாநில அரசுகள் இந்த கட்டுக்கடங்காத விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. எனவே வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு சிவசண்முககுமார் கூறினார்.