

அதன்படி போரூர் லட்சுமி நகரில் சென்னை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள பூங்காவின் சுற்றுச்சுவரில் மாநகராட்சி சார்பில் வண்ண ஓவியம் வரையப்பட்டது. எனவே பூங்கா அருகில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவரில் வெளியாட்கள் யாரும் சுவரொட்டிகள் ஒட்டி அசுத்தம் செய்யாத வகையில் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தலின்பேரில் குடியிருப்புவாசிகளே தங்களின் குழந்தைகள் மூலமாக சுவரில் வண்ண ஓவியங்கள் வரைய முடிவு செய்தனர்.
இதற்காக தயாநிதி, ஆனந்தகுமார் ஆகிய 2 ஓவியர்களின் உதவியுடன் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவரில் மீன், யானை, சிறுத்தை, கார், மரங்கள் என வண்ணமயமான ஓவியங்களை அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சிறுவர்-சிறுமிகள் வரைந்தனர். கண்ணை கவரும் வகையில் வரையப்பட்டு இருந்த அந்த ஓவியங்களை அந்த வழியாக செல்பவர்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.