பிரம்மோற்சவ விழா 4-வது நாள்: கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான நேற்று காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பிரம்மோற்சவ விழா 4-வது நாள்: கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா
Published on

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா நடந்தது. மக்களுக்கு அனைத்து வரங்களையும், வளங்களையும் அள்ளித்தருபவர் ஸ்ரீமன் நாராயணனே என்பதை குறிக்கும் வகையில் கல்ப விருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அப்போது நான்கு மாடவீதிகளில் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... எனப் பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். வாகன வீதிஉலாவின் முன்னால் நடன கலைஞர்கள் கோலாட்டம் ஆடினர். நாட்டுப்புற நடனமும் நடந்தது. கேரள செண்டை மேளம், ஐதராபாத் அதிரடி டிரம்ஸ் ஆகியவை இசைக்கப்பட்டன. விஷ்ணு, நரசிம்மர் வேடமிட்டு பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.

வீதிஉலாவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி ரவிகிருஷ்ணா, கோவில் துணை அதிகாரி கோதண்டராமாராவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து பிற்பகல் 2 மணியில் இருந்து மாலை 4 மணிவரை உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனமும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணிவரை ஊஞ்சல் சேவையும் நடந்தது. இரவு 9 மணியில் இருந்து 11 மணிவரை சர்வ பூபால வாகன வீதி உலா நடந்தது.

சிறப்பு அலங்காரத்தில் மலையப்பசாமி சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான இன்று (புதன்கிழமை) காலை மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகன வீதிஉலா, இரவு கருட வாகன (கருடசேவை) வீதிஉலா நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com