

திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை அனுமந்த வாகன வீதிஉலா நடந்தது.
திரேதா யுகத்தில் மகா விஷ்ணு ராமாவதாரத்தின்போது அனுமார் அவருக்குச் செய்த உதவிகளை யாராலும் மறக்க முடியாது. தன்னலமற்ற பக்தருக்கான மரியாதைத்தான் 6-ம் நாள் காலை நடக்கும் அனுமந்த வாகனம். அப்போது உற்சவர் மலையப்பசாமி வில்-அம்புடன் கோதண்டராமராக தங்க, வைர நகைகளால் அலங்கரித்து அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அப்போது நான்கு மாடவீதிகளில் திரண்டிருந்த திரளான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என விண்ணை முட்டும் அளவுக்கு பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். வாகன வீதிஉலாவின் முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், காளைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. நடன கலைஞர்கள் கோலாட்டம், நாட்டுப்புற நடனம் ஆடினர். கேரள செண்டை மேளம், தாரை தப்பட்டை இசைக்கப்பட்டது. அனுமார் வேடமிட்டு பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.
யானை வாகன வீதிஉலா
அதைத்தொடர்ந்து மாலை 5 மணியில் இருந்து இரவு 7 மணிவரை தங்கத்தேரோட்டம் நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் கூடியிருந்த திரளான பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்து அருள் பாலித்தார்கள். இரவு 9 மணியில் இருந்து 11 மணிவரை யானை வாகன வீதி உலா நடந்தது.
கஜேந்திர மோட்சத்தில் யானை ஒன்றின் அபயக்குரல் கேட்டு ஓடி வந்த ஸ்ரீமன் நாராயணன், ஸ்ரீசுதர்சனச் சக்கரத்தால் முதலையை வதைத்து யானையை காப்பாற்றினார். எனவே கஜேந்திர மோட்சத்தை விளக்கும் வகையில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் மலையப்பசாமி யானை மீது எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மேற்கண்ட வாகன வீதிஉலாவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரிகள் கே.எஸ்.சீனிவாசராஜு, போலா.பாஸ்கர், முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி ரவிகிருஷ்ணா, கோவில் துணை அதிகாரி கோதண்டராமாராவ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலில் இன்று
பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.