

திருப்பூர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந்தேதி திருச்சியில் தேசம் காப்போம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்த கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அவினாசியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமை தாங்கி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பழ.சண்முகம், மாவட்ட செயலாளர்கள் தமிழ்வேந்தன், தமிழ் முத்து, ஜல்லிப்பட்டி முருகன், இலக்கியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் மூர்த்தி வரவேற்று பேசினார். முதன்மை செயலாளர் தாரவரசு, துணை பொதுச்செயலாளர்கள் கனியமுதன், உஞ்சை அரசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். முன்னதாக தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருச்சியில் நடைபெற உள்ள தேசம் காப்போம் மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, இடதுசாரி கட்சி தலைவர்கள், தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர். மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். மீண்டும் பயங்கரவாத சக்திகளின் கைகளில் ஆட்சி சிக்கி விடக்கூடாது என்பதற்காகவும், மதசார்பற்ற சக்திகளின் வாக்குகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம். இலங்கையில் நடக்கும் அரசியல் குழப்பங்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு முக்கியமான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசு தப்பிப்பதா? அல்லது கலைக்கப்படுவதா? என்ற நெருக்கடியில் உள்ள சூழலில் முடிவை தமிழ்தேசிய கட்சி தீர்மானிப்பதாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சிந்தித்து தகுந்த முடிவு எடுக்க வேண்டும். ராஜபக்சே சர்வதேச இனப்படுகொலையாளி.