

அரியலூர்,
அரியலூர் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரராமன் (வயது 45). இவர், அரியலூர் பெரியகடைதெருவில் சுந்தரா ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். அங்கு தங்க நகைகள் மட்டுமின்றி வெள்ளி நகைகளும், வெள்ளி பாத்திரங்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் நகைக்கடையை பூட்டி விட்டு சுந்தரராமன் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்தநிலையில் நேற்று காலை அந்த நகைக்கடையின் ஷட்டர் கதவு கடப்பாரையால் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து. சுந்தரராமனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடைக்கு விரைந்து வந்த சுந்தரராமன் உள்ளே சென்று பார்த்தபோது. அங்கிருந்த தங்க சங்கிலிகள், வளையல்கள், நெக்லஸ் உள்ளிட்ட 25 பவுன் நகைகள் மற்றும் 80 கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
போலீஸ் அதிகாரிகள் விசாரணை
இதுகுறித்து அரியலூர் போலீசாருக்கு சுந்தரராமன் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார்கிரி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது நகைக்கடையின் ஷட்டரை கடப்பாரையால் நெம்பி உடைத்து. அதன் வழியாக உள்ளே சென்ற கொள்ளையர்கள் அங்கிருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று விசாரணை நடத்தினர்.
துப்பறியும் மோப்பநாய் கீதா சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி தட்டார தெரு, தாண்டவராய தெரு, மேலதெரு மாரியம்மன்கோவில் வழியாக ஓடி அங்குள்ள ஒரு ஓட்டு வீட்டின் உள்ளே போய் நின்றது. அதன்பேரில் அந்த வீட்டில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இந்த கொள்ளை குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைக்கடையில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதன்பேரிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் அரியலூரில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நகைக்கடையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மின்தடை ஏற்பட்டபோது நகை வாங்குவது போல் வந்த மர்ம நபர்கள் சுமார் 10 பவுன் நகைகளை திருடி சென்றது குறிப்பிடத்தக்கது.