செங்கல்பட்டில் துணிகரம் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகள் கொள்ளை ‘ஆம்லெட்’ போட்டு சாப்பிட்டு சென்ற திருடர்கள்

செங்கல்பட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் தங்க, வைர நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். திருடிச் செல்வதற்கு முன்பு அந்த வீட்டில் ஆம்லெட் போட்டு சாப்பிட்டு சென்றனர்.
செங்கல்பட்டில் துணிகரம் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகள் கொள்ளை ‘ஆம்லெட்’ போட்டு சாப்பிட்டு சென்ற திருடர்கள்
Published on

செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு வெண்பாக்கம் அண்ணா தெருவை சேர்ந்தவர் வாசுதேவன். இவர் கடந்த 23-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திண்டிவனத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார்.

பின்னர் ஊருக்கு திரும்பிய வாசுதேவன், தன்னுடைய வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு, பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகைகள், வைர மோதிரம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரிந்தது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், கொள்ளையர்கள் சிறிய கடப்பாரையை பயன்படுத்தி வாசுதேவன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைக்கப்பட்டு இருந்த தங்க, வைர நகைகளையும், எல்.இ.டி. டி.வி.யையும் திருடி சென்றுள்ளனர்.

இதையடுத்து, போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், அதில் உள்ள ஹார்டு டிஸ்கையும் கொள்ளையர்கள் கையோடு எடுத்து சென்றுள்ளது தெரியவந்தது.

மேலும், அவர்கள் கொள்ளை அடித்துவிட்டு செல்லும் முன் குளிர்சாதன பெட்டியில் இருந்த பொருட்களை எடுத்து சாப்பிட்டுள்ளனர். சமையலறைக்கு சென்று முட்டை ஆம்லெட் போட்டு சாப்பிட்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com