

தேனி,
பா.ஜ.க. சார்பில் தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்படமாட்டாது என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இதற்கிடையே திருத்தணியில் நேற்று தடையை மீறி பா.ஜ.க.வினர் வேல் யாத்திரையை தொடங்க முயன்றனர். அப்போது யாத்திரையை தொடங்க வந்த மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து வேல் யாத்திரை நடத்த அனுமதி அளிக்கக்கோரியும், திருத்தணியில் பா.ஜ.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நேற்று தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வினர் மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி, தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையம் முன்பு பா.ஜ.க.வினர் நேற்று திரண்டனர். அப்போது வேல் யாத்திரைக்கு அனுமதிக்க வலியுறுத்தியும், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்தும் அவர்கள் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மாநில நிர்வாகிகள் திருத்தணியில் கைது செய்யப்பட்ட தகவலை அறிந்ததும், தேனி கலெக்டர் அலுவலகம் நோக்கி பா.ஜ.க.வினர் ஊர்வலமாக புறப்பட்டனர். இதற்கு போலீசார் அனுமதி அளிக்காத போதிலும், தடையை மீறி ஊர்வலம் நடத்தினர்.
இந்த ஊர்வலத்துக்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் வெங்கடேஸ்வரன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ராஜபாண்டியன் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஊர்வலமாக சென்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் வந்தபோது, பா.ஜ.க.வினரின் ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். இருப்பினும் அவர்கள் வெற்றிவேல்... வீரவேல்... என்ற கோஷத்தோடும், தமிழக அரசை கண்டித்து கோஷமிட்டபடியும் கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர்.
இதையடுத்து கலெக்டர் அலுவலகம் முன்பு வந்த அவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது சிலர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அவர்களை குண்டுகட்டாக தூக்கி போலீசார் அப்புறப்படுத்தினர். இதில், தடையை மீறி ஊர்வலம் மற்றும் மறியலில் ஈடுபட்ட 11 பெண்கள் உள்பட 305 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
பா.ஜ.க.வினரின் இந்த ஊர்வலம் மற்றும் மறியலால் தேனி-மதுரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முன்னதாக ஆர்ப்பாட்டம் செய்வதற்கு ஒலிபெருக்கியை எடுத்து வந்தனர். அதை பயன்படுத்த போலீசார் அனுமதி மறுத்தனர். அப்போது சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அனுமதி மறுத்ததால் ஒலிபெருக்கியை பயன்படுத்தாமல் அங்கிருந்து எடுத்துச் சென்றனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.