

புதுச்சேரி,
புதுவையில் ஒரே நாளில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
லாஸ்பேட்டை தாகூர் நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரோகித் திருவேதி. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மம்தா திருவேதி. ரோகித் திருவேதிக்கு உடல்நலம் சரியில்லாததால் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மம்தா திருவேதி அருகில் இருந்து கவனித்து வந்தார். இதன் காரணமாக அவர்கள் வீடு பூட்டியிருந்தது.
இதை தெரிந்துகொண்ட மர்ம நபர்கள் யாரோ வீட்டின் பின்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 12 பவுன் நகையை திருடி சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதே பகுதியை சேர்ந்தவர் சிவகுரு (வயது 32). இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்ற நிலையில், மர்மநபர் அவரது வீட்டு கதவினை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த 4 பவுன் நகை மற்றும் மற்றும் ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றுள்ளார். இதுதொடர்பாக கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவையில் கோரிமேடு, ரெட்டியார்பாளையம், லாஸ்பேட்டை என தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் பதிவாகி வருகிறது. மர்ம நபர்கள் ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதில் ஈடுபடுபவர்களை கைது செய்ய போலீசாரின் ரோந்துபணியை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.