வெள்ளவேடு அருகே 2 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு

வெள்ளவேடு அருகே மர்ம நபர்கள் 2 கடைகளில் பூட்டை உடைத்து திருடினர். 8 கடைகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளவேடு அருகே 2 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு
Published on

2 கடையில் கொள்ளை

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகே உள்ள திருமழிசை ஜெகநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் தாளமுத்தரசன் (வயது 33). இவர் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் காலை கடையை திறப்பதற்காக சென்றபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.25 ஆயிரம் ரொக்கம், ரூ.20 ஆயிரம் மதிப்பிலான சிகரெட் பொட்டலங்கள் மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.

இதேபோல் அவரது கடைக்கு அருகே உள்ள ஜானகிராமன் (55) என்பவரின் செல்போன் கடையிலும் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து ரூ.1,000-தை திருடிவிட்டு 2 செல்போன்களை உடைத்து விட்டு சென்றுள்ளனர்.

8 கடைகளில் கொள்ளை முயற்சி

அதே பகுதியில் உள்ள வைத்திலிங்கம் (40) என்பவரின் சூப்பர் மார்க்கெட், விஜயன் (32) நடத்தி வரும் துணிக்கடை, சீனிவாசன் (38), ஜெகன் (34), ராம் (40), தமிழரசன் (42), மகேஷ் (32) என்பவரது கடைகள் உள்ளிட்ட 8 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட முயன்றுள்ளனர்.

போலீஸ் விசாரணை

இது குறித்து பாதிக்கப்பட்ட கடைக்காரர்கள் வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் கொள்ளை சம்பவம் நடந்த கடைகளில் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைக்கும் காட்சிகள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளை வைத்து வெள்ளவேடு போலீசார் குற்றவாளிகள் யார் என தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

திருமழிசை பகுதியில் நேற்று முன்தினம் ஆட்கள் அதிகம் நடமாடும் முக்கிய சாலையில் நடந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இரவு நேரங்களில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும் என திருமழிசை பகுதியை சேர்ந்த வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com