மதுக்கடைகளின் உரிம தொகை உயர்வு? நாராயணசாமி தலைமையில் ஆலோசனை

புதுவையில் மதுக்கடைகளின் உரிம தொகையை உயர்த்துவது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மதுக்கடைகளின் உரிம தொகை உயர்வு? நாராயணசாமி தலைமையில் ஆலோசனை
Published on

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிமாநில மதுபிரியர்கள் புதுவைக்கு வருவதை தவிர்க்கும் வகையில் தமிழக மதுவகைகளுக்கு நிகராக கொரோனா வரி விதிக்கப்பட்டது. இதனால் புதுவையில் மதுபானங்கள் விலை உயர்ந்தது. இது மதுபிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விலை உயர்வால் தமிழகத்தில் இருந்து மது குடிப்பதற்காக வருபவர்களின் எண்ணிக்கை முழுவதுமாக சரிந்தது.

கடந்த செப்டம்பர் மாதம் மேலும் 3 மாதங்களுக்கு மதுபானங்கள் மீதான நீட்டிக்கப்பட்ட கொரோனா வரி விதிப்பு இன்று (திங்கட்கிழமை) முடிவடைகிறது. இந்த நிலையில் மீண்டும் கொரோனா வரி விதிப்பை நீட்டிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக சட்டசபை வளாகத்தில் கடந்த 27-ந் தேதி அமைச்சர்கள், அரசு துறை செயலாளர் ஆலோசனை நடந்தது. 2-வது கட்டமாக நேற்று மதியம் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர் நமச்சிவாயம், தலைமை செயலாளர் அஸ்வனி குமார், நிதித்துறை செயலாளர் சுர்பீர் சிங் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அப்போது அதிகாரிகள் தரப்பில், வரி விதிப்பை நீட்டிப்பதால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும், தமிழகத்தை விட புதுவையில் விலை அதிகமாக இருந்தால் தான் பிற மாநிலங்களில் இருந்து மது குடிப்பதற்காக இங்கு யாரும் வர மாட்டார்கள். இதனால் தான் தற்போது நாம் கொரோனாவை கட்டுக்குள் வைத்துள்ளோம். வெளிமாநில மதுபிரியர்கள் இங்கு வந்தால் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று கூறினர். அமைச்சர்கள் தரப்பில், கொரோனா வரி விதிப்பால் மதுபானங்கள் விற்பனை பெருமளவில் சரிந்துள்ளது. இதனால் மாநில வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதனை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில், கொரோனா வரியை முழுவதுமாக நீக்கி விட்டு, மதுபானங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு வரி விதித்து, மதுக்கடை உரிம தொகையை உயர்த்த முடிவு செய்ததாக தெரிகிறது. இதற்கான கோப்பு அரசு சார்பில் கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கவர்னர் அனுமதி அளிக்கும் பட்சத்தில் மதுபானத்தின் விலை குறைய வாய்ப்பு உள்ளது. அவர் அனுமதி வழங்காமல் தற்போது இருப்பது போல் கொரோனா வரியை நீட்டித்து உத்தரவிட்டால் மதுபானங்களில் விலை குறைய வாய்ப்பில்லை. கொரோனா வரியை நீக்க கவர்னர் அனுமதி அளிப்பாரா? என்ற எதிர்பார்ப்பில் மதுபிரியர்கள் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com