பாகல்கோட்டை, விஜயாப்புரா, சித்ரதுர்காவில் லஞ்சம் வாங்கிய 3 அரசு அதிகாரிகள் கைது - ரூ.2.20 லட்சம் பறிமுதல்

பாகல்கோட்டை, விஜயாப்புரா, சித்ரதுர்காவில் லஞ்சம் வாங்கிய 3 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.2.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பாகல்கோட்டை, விஜயாப்புரா, சித்ரதுர்காவில் லஞ்சம் வாங்கிய 3 அரசு அதிகாரிகள் கைது - ரூ.2.20 லட்சம் பறிமுதல்
Published on

சித்ரதுர்கா,

சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்கா அருகே கல்கெரே கிராமத்தை சேர்ந்த ஒருவரின் மகள் கலப்பு திருமணம் செய்திருந்தார். இதற்காக சமூக நலத்துறை சார்பில் ரூ.3 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும். அந்த ரூ.3 லட்சத்தை வழங்கும்படி சமூக நலத்துறை உதவி இயக்குனரான மஞ்சுநாத்திடம், அந்த நபர் விண்ணப்பம் கொடுத்திருந்தார். அந்த விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட மஞ்சுநாத், அந்த நபரிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதற்கு அந்த நபரும் சம்மதம் தெரிவித்தார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர், ஊழல் தடுப்பு படை போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் கூறிய அறிவுரையின்படி நேற்று சமூக நலத்துறை உதவி இயக்குனர் மஞ்சுநாத்தை சந்தித்து ரூ.15 ஆயிரத்தை அந்த நபர் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார், மஞ்சுநாத்தை பிடித்து கைது செய்தார்கள். அவரிடம் இருந்து ரூ.15 ஆயிரம் லஞ்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுபோல, பாகல்கோட்டை மாவட்டம் பாதாமியில் வருவாய்த்துறை அதிகாரியாக இருந்து வரும் சிவராயப்பா என்பவர், ஒரு நபரின் தந்தை பெயரில் உள்ள சொத்துகளை, அவரது பெயருக்கு மாற்றி கொடுக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கி இருந்தார்.

இதையடுத்து, அதிகாரி சிவராயப்பாவை ஊழல் தடுப்பு படை போலீசார் கைது செய்தாகள். அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தார்கள். இதுபோன்று, விஜயாப்புரா மாவட்டம் சதாசிவநகரை சேர்ந்த ஒரு தொழில் அதிபர், தொழில் தொடங்குவதற்காக அரசு வழங்கிய ரூ.20 லட்சத்தை வழங்கும்படி தொழில்துறை இணை இயக்குனர் விஜய்குமாரிடம் விண்ணப்பம் கொடுத்திருந்தார்.

அந்த நபருக்கு ரூ.20 லட்சத்தை வழங்க, ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுக்கும்படி இணை இயக்குனர் விஜய்குமார் கேட்டு இருந்தார். அதன்படி, நேற்று விஜய்குமாரிடம் ரூ.1 லட்சத்தை அந்த நபர் கொடுத்தார்.

அப்போது அவரை போலீசார் கைது செய்து, லஞ்ச பணத்தை பறிமுதல் செய்தார்கள். இந்த சம்பவங்கள் தொடர்பாக சித்ரதுர்கா, பாகல்கோட்டை, விஜயாப்புரா ஊழல் தடுப்பு படை போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து கைதான அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com