லஞ்சம் வாங்கிய போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்

அம்பத்தூரில், வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானதால் போலீஸ் கமிஷனர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
லஞ்சம் வாங்கிய போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
Published on

அம்பத்தூர்,

சென்னை அம்பத்தூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ரவிச்சந்திரன். இவர், அம்பத்தூர் தேசிய நெடுஞ்சாலை அருகே தனது போலீஸ் வாகனத்தில் அமர்ந்தபடி வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ, நேற்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

வாகன ஓட்டிகளிடம் அபராத தொகையை பணமாக பெறக்கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், வாகன ஓட்டிகளிடம் பணம் பெறும் வீடியோ வெளியானதால், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

ரவிச்சந்திரன், ஏற்கனவே தேனாம்பேட்டையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற தர்மராஜ் என்ற போலீஸ்காரரை விரட்டிச்சென்று கீழே தள்ளி விபத்து ஏற்படுத்திய வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். அங்கிருந்து கடந்த மாதம்தான் அவர் அம்பத்தூர் போக்குவரத்து போலீசுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் மீண்டும் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெறுவதுபோன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் உடனடியாக அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com