லஞ்சப்புகார்: மோட்டார் வாகன ஆய்வாளருக்கு 2 ஆண்டு ஜெயில்; சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

சென்னை வியாசர்பாடியில் உள்ள வடக்கு வட்டார போக்கு வரத்து அலவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஆர்.சின்னக்கண்ணு. கடந்த 2009-ம் ஆண்டு இவர் பணியில் இருந்த போது மூலக்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.
லஞ்சப்புகார்: மோட்டார் வாகன ஆய்வாளருக்கு 2 ஆண்டு ஜெயில்; சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
Published on

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை வழிமறித்த சின்னக்கண்ணு ஆவணங்களை கேட்டுள்ளார். வாகனத்தின் உரிமையாளர் குமார் என்பவர் அனைத்து ஆவணங்களையும் காண்பித்தபோதும், ஆர்.சி. புத்தகத்தை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற ஆவணங்களை சின்னக்கண்ணு திரும்ப கொடுத்துள்ளார். வாகன உரிமையாளர் ஆர்.சி. புத்தகத்தை கேட்டதற்கு லஞ்சமாக ரூ.1,200 கொடுத்தால்தான் தருவேன் என்று கூறி உள்ளார்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் குமார் புகார் செய்தார். பின்னர், போலீசார் அறிவுரையின் பேரில் லஞ்சப் பணத்தை கொடுத்த போது, அதை பெற்றுக்கொண்ட சின்னக்கண்ணுவை போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஓம்பிரகாஷ், மோட்டார் வாகன ஆய்வாளர் சின்னக்கண்ணு மீதான லஞ்சப்புகார் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com