பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், அதிகாரிகள் உண்ணாவிரதம்

செல்போன் டவர்களை மேம்படுத்தி 4 ஜி சேவையை வழங்க வலியுறுத்தி தஞ்சையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், அதிகாரிகள் உண்ணாவிரதம்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்திற்கு தலைவர் கிள்ளிவளவன் தலைமை தாங்கினார். பல்வேறு சங்கங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மகேந்திரன், முரளி, பிரபாகரன், முருகையன், சேகர், மாவட்ட தலைவர் மாணிக்கம், மாநில துணை செயலாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செல்போன் டவர்களை மேம்படுத்தி 4 ஜி சேவையை வழங்க வேண்டும். 5 ஜி சேவையை தொடங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதாமாதம் சம்பளத்தை உரிய தேதியில் வழங்கவேண்டும். பி.எஸ்.என்.எல்.க்கு சொந்தமான டவர்களை தனியார் மயம் ஆக்கக்கூடாது.

பி.எஸ்.என்.எல்.க்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையான ரூ.39 ஆயிரம் கோடியை உடனே வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல்.-க்கு சொந்தமான காலிமனைகளை பணமாக்கி கடனை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். 3-வது ஊதிய மாற்றம், நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சதவீத ஓய்வூதிய பலன் ஆகியவற்றுக்கு தீர்வு காண வேண்டும். கண்ணாடி இழை கேபிள் பட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார், மாவட்ட செயலாளர் தில்லைவனம், பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் சேதுராமன், சொக்கலிங்கம், அன்பழகன், மதியழகன், சாமிநாதன், பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். போராட்டத்தை சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால் முடித்து வைத்தார். முடிவில் பொருளாளர் கலைவாணன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com