வேதாரண்யத்தில் பி.எஸ்.என்.எல். கேபிள் வயர்கள் திருடிய 4 பேர் கைது

வேதாரண்யத்தில் பி.எஸ்.என்.எல். கேபிள் வயர்களை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யத்தில் பி.எஸ்.என்.எல். கேபிள் வயர்கள் திருடிய 4 பேர் கைது
Published on

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்புதுறை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கிருந்து செம்போடை, கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம, தென்னம்புலம் பகுதிகளுக்கு கேபிள் வயர்கள் மூலம் இணைப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் பாலங்கள் சீரமைப்பு பணி, சாலை அகலப்படுத்தும் பணி ஆகியவை நடைபெறுவதால் அந்த பகுதியில் உள்ள கேபிள் வயர்கள் பூமிக்குள் இருந்து வெளியில் எடுக்கப்பட்டு வெளியே போடப்பட்டுள்ளன.

இதை பயன்படுத்தி வேதாரண்யத்தில் பல்வேறு இடங்களில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பி.எஸ்.என்.எல். கேபிள் வயர்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல் பொறியாளர் ராமச்சந்திரன் வேதாரண்யம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும். போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கருப்பம்புலம் பஸ் நிறுத்தம் அருகே 2 மோட்டார் சைக்கிள்களில் சாக்கு மூட்டையுடன் நின்று கொண்டிருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டையில் பார்த்த போது அதில் 100 கிலோ செம்பு கம்பிகள் இருந்தது. இதை தொடர்ந்து சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் வேதாரண்யத்தை அடுத்த அண்டர்காடு கிராமத்தை சேர்ந்த அருண்குமார் (25), தினேஷ்(27), செல்லபாண்டி(22), சூரியா (20) என்பதும், இவர்கள் தான் பி.எஸ்.என்.எல். கேபிள் வயர்களை திருடி சென்றதும், திருடி சென்ற கேபிள் வயர்களை எரித்து செம்பு கம்பிகளை விற்பனை செய்ய எடுத்து சென்றதும் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100 கிலோ செம்பு கம்பிகள், 2 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com