அங்கன்வாடி ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு; முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்

அங்கன்வாடி ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
அங்கன்வாடி ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு; முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கருத்தரங்கம் கம்பன் கலையரங்கத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அங்கன்வாடி ஊழியர் சங்க தலைவர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். அமைச்சர் கந்தசாமி முன்னிலை வகித்தார்.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் 13 லட்சம் மக்கள் உள்ளனர். இங்கு கனிம வளங்கள் இல்லை. மத்திய அரசு நமக்கு முதலில் 90 சதவீதம் மானியம் வழங்கியது. அதனை தற்போது 26 சதவீதமாக குறைத்துள்ளது. நமக்கு அருகில் உள்ள தமிழ்நாட்டிற்கு 42 சதவீதம் மானியம் வழங்கி வருகிறது. இந்த ஆண்டில் நமது மாநில பட்ஜெட் ரூ.8,450 கோடி. மத்திய அரசு மானியமாக ரூ.1,500 கோடி மட்டுமே வழங்க உள்ளது. இதில் 55 சதவீதம் வரை சம்பளத்திற்கு செல்கிறது.

7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தியதால் நமக்கு ஆண்டிற்கு ரூ.650 கோடி கூடுதல் செலவு ஏற்படுகிறது. இதனை மத்திய அரசு நமக்கு தரவில்லை. பட்ஜெட்டில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 12 மாத சம்பளம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுவையில் 8 மாதம் அரிசி வழங்க இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரிசி வழங்க கவர்னர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அவர் அரிசிக்கான தொகையை பணமாக பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார். கவர்னர் கிரண்பெடி பாகூர் பகுதியில் கள ஆய்வு மேற்கொள்ளும் போது பொதுமக்களிடம் அரிசி வழங்க வேண்டுமா?, பணமாக வங்கி கணக்கில் செலுத்த வேண்டுமா? என்று கேட்ட போது பொதுமக்கள் அரிசி தான் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவிடாமல் கவர்னர் தடையாக உள்ளார். கவர்னர் மாளிகைக்கு அனுப்பும் கோப்புகள் மீது தேவையில்லாத கேள்விகள் கேட்டு அதனை திரும்பி அனுப்புகிறார். இதனால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com