வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு சேமித்த ரூ.38 ஆயிரத்தை மாநகராட்சி பள்ளிக்கு வழங்கிய மாணவி

திருப்பூரில் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு உண்டியலில் சேமித்த ரூ.38ஆயிரத்தை மாநகராட்சி பள்ளிக்கு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் வழங்கினார்.
வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு சேமித்த ரூ.38 ஆயிரத்தை மாநகராட்சி பள்ளிக்கு வழங்கிய மாணவி
Published on

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். பனியன் நிறுவன அதிபர். இவருடைய மனைவி வித்யா. இந்த தம்பதியின் ஒரே மகள் சஷ்டிஹா (வயது 8). இவள் அணைபுதூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த 2 ஆண்டுகளாக பெற்றோர் கொடுக்கும் பணத்தை 3 உண்டியல்களில் சஷ்டிஹா சேமித்து வந்தாள். இந்த நிலையில் 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதியுதவி தேவை என்பதை அறிந்த சஷ்டிஹா தான் சேமித்து வைத்த பணத்தை மாநகராட்சிக்கு பள்ளிக்கு கொடுக்க விரும்புவதாக தனது தந்தையிடம் கூறி உள்ளார்.

இதையடுத்து 3 உண்டியல்களிலும் இருந்த ரூ.38 ஆயிரத்து 288 -ஐ திருப்பூர் வடக்கு வட்டார கல்வி அதிகாரி அழகர்சாமி முன்னிலையில் பள்ளி தலைமையாசிரியை ராதாமணியிடம், மாணவி சஷ்டிஹா வழங்கினார்.

இதையடுத்து மாணவிக்கும், அவளுடைய பெற்றோருக்கும் பள்ளி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டதுடன், மாணவியை அனைவரும் பாராட்டினர். இதுகுறித்து மாணவி சஷ்டிஹா கூறும்போது நான் தினமும் என்னுடைய பள்ளிக்கு இந்த மாநகராட்சி பள்ளியை கடந்துதான் செல்வேன். அப்போது ஏழை குழந்தைகள் படிக்கும் இந்த பள்ளிக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது. அதன்படி சேமிப்பு பணத்தை வழங்கினேன் என்றாள்.

இந்த பள்ளியில் 1140 மாணவர்கள் படித்து வரும் நிலையில் போதுமான வகுப்பறைகள் இல்லாமல் இருந்தது. தற்போது தனியார் பங்களிப்புடன் ரூ.75 லட்சத்தில் 8 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பரணி நடராஜ், கல்வி குழு தலைவர் வி.கே.பி.மணி மற்றும் மாணவ-மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com