

திண்டுக்கல்,
திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரியில் புதிதாக வகுப்பறை கட்டிடம் கட்டப்படுகிறது. அந்த கட்டிடத்துக்கு கான்கிரீட் தூண்கள் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு இருக்கிறது. இதற்கு அருகில் தரைமட்ட தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு உள்ளது. மேலும் கட்டுமான பணிகள் முடியும் வரை, அதில் தண்ணீர் பிடித்து வைத்து பயன்படுத்த தொழிலாளர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி தரைமட்ட தொட்டியில் தண்ணீர் பிடித்து வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் கட்டிட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். இதில் வடமதுரை அருகேயுள்ள மொட்டணம்பட்டியை சேர்ந்த முத்தன் மகன் மணிகண்டன் (வயது 20), கான்கிரீட் தூண்களுக்கு தோண்டிய பள்ளத்தில் நின்று வேலை செய்துள்ளார்.
மேலும் அவர், தரைமட்ட தொட்டிக்கு மிக அருகில் உள்ள ஒரு பள்ளத்துக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பள்ளத்தை ஒட்டி இருந்த தொட்டியின் ஒருபக்க சுவர் இடிந்து மணிகண்டன் மீது விழுந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்த தொழிலாளர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
எனினும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது தொட்டிக்கும், பள்ளத்துக்கும் இடையே போதிய அளவில் மண் இல்லாததால் சுவர் வலுவிழந்து இடிந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த மணிகண்டனுக்கு திருமணமாகி விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார்.