

மும்பை,
பிரபல நடிகரும், பாரதீய ஜனதா எம்.பி.யும் ஆன சத்ருகன் சின்கா, மும்பை ஜூகுவில் உள்ள தனது 8 மாடி பங்களாவில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் தனது பங்களாவை சில ஆண்டுகளுக்கு முன்பு மறுசீரமைப்பு செய்தார். தற்போது, இந்த பங்களாவில் சட்டவிரோதமாக கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதாக மாநகராட்சிக்கு புகார் வந்தது.
இதைத்தொடர்ந்து, சட்டவிரோத கட்டிடங்களை மாநகராட்சி சமீபத்தில் இடித்து தள்ளியது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கையின்போது சத்ருகன் சின்கா எம்.பி. வீட்டில் இருந்தார். மாநகராட்சி அதிகாரிகளுக்கு போதிய ஒத்துழைப்பு அளித்ததாக கூறப்பட்டது.
மத்திய அரசை விமர்சித்து வரும் பா.ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவாக சத்ருகன் சின்கா குரல் கொடுப்பதால், இதுபோன்ற அதிர்ச்சி நடவடிக்கைகளை அவர் எதிர்கொள்வதாக தகவல் வெளியானது. இதனை மேற்கோள்காட்டி நேற்று சத்ருகன் சின்கா எம்.பி. வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:
உண்மை, புள்ளிவிவரம் மற்றும் யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவு ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட நேர்மையான அரசியலுக்கு நான் விலை கொடுக்கிறேனா? என்று பொதுமக்கள் என்னிடம் கேட்கிறார்கள். இதற்கு என்னிடம் பதில் இல்லை.
டெல்லியில் என்னுடைய பாதுகாப்பை நீக்கி, நடவடிக்கையை தொடங்கினார்கள். இப்போது என் வீட்டை இடிக்கும் செயல். ஒட்டுமொத்தத்தில், மும்பையில் சில உணவகங்களில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவங்களை உதாரணம் காட்டி நடவடிக்கை எடுத்து இருக்கலாம். அப்படி என்றால், இதனை நான் வரவேற்கிறேன். மாநகராட்சி அதன் 2ம் அத்தியாயத்தை தொடங்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அதில் கூறியிருக்கிறார்.