ஆக்கிரமித்து கட்டப்பட்ட 120 வீடுகளை இடிக்கும் பணி தொடக்கம்

ஆவடி ஏரியில் ரூ.28 கோடி மதிப்பிலான சுற்றுலா மேம்பாட்டு பணிக்காக ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 120 வீடுகளை இடித்து அகற்றும் பணி நேற்று தொடங்கியது. முதல் கட்டமாக ஜே.சி.பி.எந்திரம் உதவியுடன் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
ஆக்கிரமித்து கட்டப்பட்ட 120 வீடுகளை இடிக்கும் பணி தொடக்கம்
Published on

பூந்தமல்லி,

ஆவடி பருத்திப்பட்டு ஏரியை ரூ.28 கோடி செலவில் மேம்படுத்தி சுற்றுலா தலமாக மாற்ற பொதுப்பணித்துறை அனுமதி அளித்து உள்ளது. இதைத்தொடர்ந்து ஏரியை சுற்றி ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றி ஏரியை பலப்படுத்தி சுற்றுலா தலமாக மாற்ற வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

இதையடுத்து ஏரி பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் பற்றி அதிகாரிகள் கணக்கெடுத்தனர். இதில் மொத்தம் 120 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த வீடுகளை இடித்து அகற்ற திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 120 வீடுகளுக்கு வருவாய்த்துறை சார்பில் நோட்டீசு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ, தாசில்தார் மதன் ஆகியோர் தலைமையில் வருவாய் துறையினர் ஆவடி ஏரிப்பகுதிக்கு வந்தனர். அவர்கள் ஜே.சி.பி எந்திரம் மூலம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த குடியிருப்புகளை இடித்து அகற்றும் பணியை தொடங்கினார்கள். முதல் கட்டமாக நேற்று 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அகற்றி விட்டதாகவும், மீதமுள்ள குடியிருப்புகள் தொடர்ந்து அகற்றி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றிய பின்பு பொது மக்களுக்கு நடை மேடை, திறந்த வெளிதிரையரங்கம், பூங்கா என சுற்றுலா தலமாக இந்த பகுதி மாற்றப்படும் என அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com