‘புல்லட்’ பவானி

பவானி காந்தல்வால், உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள மதுரா நகரை சேர்ந்தவர். 23 வயதாகும் இவருக்கு புல்லட் மோட்டார் சைக்கிளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதுதான் பிடித்தமான பொழுதுபோக்கு.
‘புல்லட்’ பவானி
Published on

பவானி காந்தல்வால் புல்லட்டில் வலம் வரும்போதெல்லாம் வேலைக்கு செல்லும் பெண்களில் பெரும்பாலானவர்கள் ஆட்டோவுக்கும், பஸ்சுக்கும் காத்திருப்பதை பார்த்திருக்கிறார். அவர்களிடம் விசாரித்தபொழுது தங்களுக்கு இருசக்கர வாகனம் ஓட்டத்தெரியாது என்றிருக்கிறார்கள். என்னால் புல்லட்டை இயக்க முடிகிறபொழுது உங்களால் ஏன் ஸ்கூட்டர் ஓட்ட முடியாது? என்று கேட்டிருக்கிறார்.

அப்போதே அவர், பெண்களுக்கு ஓட்டுனர் பயிற்சி அளிப்பது பற்றி சிந்தித்திருக்கிறார். வேலைக்கு செல்லும் பெண்கள் அவரிடம், தங்களுக்கு கற்றுத்தர பெண் பயிற்சியாளர்கள் போதுமான அளவு இல்லை என்றும், இருக்கும் ஒன்றிரண்டு பயிற்சியாளர்களைத் தேடி வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்கள். அதனால் பவானி காந்தல்வால் தானே களம் இறங்க முடிவு செய்துவிட்டார். பெண்களுக்கு இருசக்கர வாகனம் ஓட்டும் பயிற்சியை வழங்குவதற்காக ஓட்டுனர் பயிற்சி மையம் ஒன்றையும் தொடங்கி விட்டார். இவர் எளிமையாக கற்றுக் கொடுக்கும் முறை அங்கு பெருமளவு பெண்களை கவர்ந்துள்ளது.

பெரும்பாலான பெண்கள் வெளி இடங்களுக்கோ, வேலைக்கோ செல்வதற்கு தங்கள் குடும்ப உறுப்பினர்களையோ, ஆட்டோ, பஸ்களையோ சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. நிறைய பெண்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவைப்பதற்கும் சிரமப்படுகிறார்கள். அவர்களால் எந்த இடத்துக்கும் நினைத்தவுடன் புறப்பட்டு சென்றுவிட்டு திரும்பிவர முடிவதில்லை. எல்லா பெண்களும் யாரையும் சார்ந்திராமல் சுயமாக செயல்படவேண்டும் என்றால், அவர்கள் அனைவரும் இருசக்கர வாகனம் ஓட்ட கற்றுக்கொள்ளவேண்டும். இருசக்கர வாகனம் ஓட்டும் பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்துவிடும். அதனால்தான் நான் இதில் அதிக ஆர்வம் செலுத்துகிறேன். ராஜஸ்தான், உத்தரபிரதேச மாநிலங்களில் 4 இடங்களில் ஓட்டுனர் பயிற்சி மையத்தை உருவாக்கி பயிற்சி கொடுத்து வருகிறேன். பயிற்சி வழங்குவதற்கான அரசு அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறேன் என்கிறார்.

பவானி பல்வேறு பகுதிகளுக்கு சென்று பெண்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். இவர் பயிற்சி கொடுப்பதை பார்த்த இவரது அம்மா தனக்கும் ரொம்ப நாளாக வாகனம் ஓட்ட ஆசையாக இருக்கிறது எனக்கும் கற்றுக்கொடு என்று கூறியிருக்கிறார். அம்மாவின் ஆசையையும் பவானி நிறைவேற்றிவைத்திருக்கிறார். பவானி பி.பி.ஏ. படித்தவர். பள்ளிப்படிப்பின்போதே தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.

நான் இப்போது சாலையில் மிக மகிழ்ச்சியாக புல்லட்டை ஓட்டிச் செல்கிறேன். ஏன்என்றால் இப்போது என்னைப்போல் ஏராளமான பெண்கள் சாலைகளில் வாகனங்களை சிறப்பாக ஓட்டிச்செல்கிறார்கள். என்னிடம் பயிற்சி பெற்ற பெண்களில் சிலர் பயிற்சியாளர்களாகவும் மாறிவிட்டார்கள் என்று மகிழ்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com