சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைப்பதால் மின்சார பயன்பாடு அதிகரிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைப்பதால் மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது.
சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைப்பதால் மின்சார பயன்பாடு அதிகரிப்பு
Published on

முருகபவனம்,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், திண்டுக்கல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் மின்சார வினியோகம் நடக்கிறது. திண்டுக்கல்லில் நிர்வாக வசதிக்காக மின் வினியோகம் பாண்டியநகர், நாகல்நகர், பஸ்நிலையம், மலைக்கோட்டை, பேகம்பூர், நேருஜிநகர் என 6 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் சுமார் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை மின் இணைப்புகள் உள்ளன. இதன் மூலம் மின்சார வினியோகம் நடக்கிறது.

பொதுவாக ஆண்டுதோறும் மழை மற்றும் குளிர் காலங்களில் மின்சாரத்தின் பயன்பாடு குறைவதும், கோடை காலத்தில் அதிகரிப்பதும் வழக்கம். இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் வாட்டி வதைத்தது. அதனால் குளிர்சாதனம், மின்விசிறியை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதையொட்டி மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது. இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கீடு செய்கிறோம். அதன்படி கோடை காலங்களில் அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 580 மெகாவாட் மின்சாரம் வரை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பொதுவாக குளிர், மழை, பனி காலங்களில் ஒரு நாளைக்கு சுமார் 380 முதல் 420 மெகாவாட் வரையில் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்த ஆண்டு கோடை காலத்தில் மின்சாரத்தின் பயன்பாடு வழக்கம் போல் அதிகரித்து உள்ளது. அதன்படி திங்கட் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 515 மெகாவாட் மின்சாரம் வரையிலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாள் ஒன்றுக்கு 490 முதல் 500 மெகாவாட் மின்சாரம் வரையிலும் பயன்படுத்தப்படுகிறது. மின்உற்பத்தியை பொறுத்தவரை தற்போது தன்னிறைவில் உள்ளோம். 300 முதல் 400 மெகாவாட் வரையிலான மின்சாரம் செல்லும் உயர் மின் அழுத்த பாதையில் பழுது ஏற்படும் போது சில சமயங்களில் மின்தடை ஏற்படுகிறது. அதனை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com