ஒரு வருடமாக பஸ் போக்குவரத்து நிறுத்தம்; பொதுமக்கள் அவதி

சேடபட்டி அருகே உள்ள டி.மீனாட்சிபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளதால் ஒரு வருடமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஒரு வருடமாக பஸ் போக்குவரத்து நிறுத்தம்; பொதுமக்கள் அவதி
Published on

உசிலம்பட்டி,

சேடபட்டி அருகே உள்ள திருமாணிக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது டி.மீனாட்சிபுரம். இந்த கிராமத்திற்கு செல்லும் சாலையை பல வருடங்களாக சீரமைக்கப்படவில்லை. இதனால் சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கிராம மக்கள் பல முறை கோரிக்கை வைத்தும், இன்று வரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் சாலை பெயர்ந்து கிடப்பதால் உசிலம்பட்டியிலிருந்து தாடையம்பட்டி, டி.மீனாட்சிபுரம் வழியாக எம்.கல்லுப்பட்டிற்கு சென்று வந்த அரசு பஸ் நிறுத்தப்பட்டது.

இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து இந்தக்கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கூறும்போது, எங்கள் கிராமத்திலிருந்து உசிலம்பட்டிக்கு செல்லும் சாலை 10 வருடங்களுக்கு மேலாக சீரமைக்கப்படாததால் சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக பயனற்று காட்சியளிக்கிறது. இந்த சாலையில் தார் போட்டதற்கான அடையாளமே தெரியாத அளவிற்கு மண்சாலை போல் உள்ளது. இதுபற்றி பல முறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

இதனால் கடந்த ஒரு வருடமாக உசிலம்பட்டியிலிருந்து எங்கள் ஊர்வழியாக வந்த அரசு பஸ்சை நிறுத்திவிட்டனர். இதனால் நாங்கள் போக்குவரத்து வசதியில்லாமல் திண்டாடி வருகிறோம் என்றார். இதே ஊரைச் சேர்ந்த ராஜா என்பவர் கூறும்போது, எங்கள் கிராமத்தில் தெருவிளக்கும் சரிவர எரியவில்லை, சாக்கடையும் பல நாட்களாகவே சுத்தம் செய்யவில்லை.

இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாய நிலை உள்ளது என்றார். சாக்கடை வசதி, சாலை வசதி, தெருவிளக்கு ஆகிய அடைப்படை வசதி கிடைக்காமல் திண்டாடி வரும் டி.மீனாட்சிபுரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com