பஸ் கட்டண உயர்வு எதிரொலி: ரெயில்களில் கூட்டம் அலைமோதல்

தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதால் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
பஸ் கட்டண உயர்வு எதிரொலி: ரெயில்களில் கூட்டம் அலைமோதல்
Published on

நாகர்கோவில்,

தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வு நேற்று முன்தினம் அமலுக்கு வந்தது. கட்டண உயர்வால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குமரி மாவட்டத்தை சேர்ந்த பெரும்பாலானோர் பணி நிமித்தம் காரணமாக தினமும் திருநெல்வேலி மற்றும் திருவனந்தபுரத்துக்கு சென்று வருகிறார்கள். இவர்கள் அனைவரும் பஸ்களில் செல்வதையே வாடிக்கையாக வைத்திருந்தனர். இந்த நிலையில் பஸ் கட்டணம் எதிர்பாராத அளவுக்கு உயர்த்தப்பட்டு இருப்பதால் இவர்கள் பெரும் பாதிப்பு அடைந்திருக்கிறார்கள்.

இதன் காரணமாக திருநெல்வேலி மற்றும் திருவனந்தபுரம் செல்பவர்கள் கடந்த 2 நாட்களாக பஸ்களில் செல்வதை தவிர்த்து ரெயில்களை நாடியுள்ளனர். ஏன் எனில் திருநெல்வேலி மற்றும் திருவனந்தபுரத்துக்கு பஸ்சில் செல்ல வேண்டும் எனில் அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அதுவே ரெயிலில் சென்றால் குறைவான கட்டணம் செலுத்தினாலே போதுமானது என்பதற்காக ரெயில்களில் செல்கிறார்கள்.

நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்ல என்ட் டூ என்ட் பஸ்சில் 71 ரூபாயும், சாதாரண பஸ்சில் 63 ரூபாயும் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் ரெயிலில் செல்ல ரூ.20 (பயணிகள் ரெயில்) மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.45-ம், சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.60-ம் வசூல் செய்யப்படுகிறது.

இதே போல் திருவனந்தபுரத்துக்கு தமிழக அரசு பஸ்சில் ரூ.73-ம், கேரள அரசு பஸ்சில் ரூ.71-ம் கட்டணமாக பெறப்படுகிறது. ஆனால் ரெயிலில்களில் திருநெல்வேலி செல்லவதற்காக வசூல் செய்யப்படும் கட்டணம் தான் திருவனந்தபுரம் செல்லவும் பெறப்படுகிறது. மேலும் நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு பயணிகள் ரெயிலில் ரூ.95-ம், மதுரைக்கு ரூ.46-ம் வசூலிக்கப்படுகிறது.

பஸ் கட்டணத்தை விட ரெயில் கட்டணம் மிகவும் குறைவாக இருப்பதால் பெரும்பாலான பயணிகள் ரெயில்களில் செல்லவே விரும்புகிறார்கள். இதனால் நாகர்கோவிலில் இருந்து வெளியூர் செல்லும் ரெயிலில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com