உத்திரமேரூர் அருகே முறையாக பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே முறையாக பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உத்திரமேரூர் அருகே முறையாக பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Published on

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ள சித்தாலப்பாக்கம், மதூர், திருமுக்கூடல், அமராவதிப்பட்டினம், குண்ணவாக்கம், ஆலஞ்சேரி உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பெரும்பாலும் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக உத்திரமேரூர், காஞ்சீபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு, சாலவாக்கம் இவற்றில் ஏதாவது ஒரு இடத்திக்கு செல்ல வேண்டியுள்ளது.

அதேபோன்று மருத்துவ தேவைகளுக்கும் இதே நிலைதான். பெரும்பாலும் உத்திரமேரூரில் அரசு அலுவலகங்கள் அனைத்தும் உள்ளதால் இந்த பகுதி மக்கள் அங்கு செல்ல வேண்டி உள்ளது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் தங்கள் உயர் கல்விக்கு பல கிலோமீட்டர் தொலைவு சென்றுதான் கல்வி கற்க வேண்டியுள்ளது.

இந்த கிராமங்களுக்கு காஞ்சீபுரத்தில் இருந்து சிறுமயிலூர் மார்க்கமாக ஒரு பஸ்சும், படூர் மார்க்கமாக ஒரு பஸ்சும், ஆனம்பாக்கம் மார்க்கமாக ஒரு பஸ்சும் இயக்கப்பட்டன. இந்த பஸ்கள் தற்போது முறையாக இயக்கப்படுவதில்லை. இந்த பஸ்கள் வருமா?, வராதா? என்ற நிலையிலேயே இந்த பகுதி மக்கள் உள்ளனர்.

இதனால் இந்த பகுதிகளில் இருந்து வேலைக்கு செல்லும் கிராம மக்களும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பஸ்களில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பியும் எந்த பயனுமில்லை என்று கூறப்படுகிறது.

ஆகவே தங்கள் பகுதிக்கு முறையாக பஸ்களை இயக்க வேண்டும். கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். முக்கியமாக உத்திரமேரூரில் இருந்து தங்கள் பகுதிக்கு பஸ்களை இயக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com