வணிக வளாகத்தின் 3-வது மாடியில் ‘லிப்ட்’டில் சிக்கி தவித்த காண்டிராக்டர்

நாகர்கோவிலில் வணிக வளாகத்தின் 3-வது மாடியில் ‘லிப்ட்’டில் சிக்கி தவித்த காண்டிராக்டரை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
வணிக வளாகத்தின் 3-வது மாடியில் ‘லிப்ட்’டில் சிக்கி தவித்த காண்டிராக்டர்
Published on

நாகர்கோவில்,

வேலூரை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 63), கட்டிட காண்டிராக்டர். இவருடைய நண்பர் ஒருவர் நாகர்கோவிலில் வசித்து வருகிறார். இதனையடுத்து தன் நண்பரை பார்ப்பதற்காக சந்திரசேகரன் நேற்று அதிகாலை நாகர்கோவில் வந்தார். பின்னர் வடசேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தின் 4-வது மாடியில் ஒரு அறை எடுத்து தங்கினார்.

இந்த நிலையில் காலை 11 மணி அளவில் வணிக வளாகத்தின் 4-வது மாடியில் இருந்து புறப்பட்ட சந்திரசேகரன் கீழே வருவதற்காக லிப்ட்டில் ஏறினார். அவர் மட்டுமே லிப்ட்டில் இருந்தார். 3-வது மாடிக்கு வந்தபோது திடீரென மின்சாரம் தடைபட்டதாக தெரிகிறது. இதனால் லிப்ட் நடுவழியில் நின்றது. ஜெனரேட்டர் பயன்படுத்திய பிறகும் லிப்ட் இயங்கவில்லை. அது திடீரென பழுதடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து தான் லிப்ட்டில் மாட்டிக்கொண்டதை அறிந்த சந்திரசேகரன் அதிர்ச்சி அடைந்தார். தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டார். ஆனால் அவரின் அபயக்குரல் வெளியே யாருக்கும் கேட்கவில்லை. கைகளால் நாலாபுறமும் லிப்ட்டை தட்டிப்பார்த்தும் பலனில்லை. இப்படியே சுமார் ஒரு மணி நேரம் வரை லிப்ட்டில் சந்திரசேகரன் சிக்கி தவித்தார். கடைசியாக சத்தம் கேட்டு ஒருவர் பார்த்தபோது சந்திரசேகரன் லிப்ட்டில் மாட்டிக்கொண்டது தெரியவந்தது.

உடனே இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி துரை தலைமையில் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர். லிப்ட் 3-வது மாடியில் இருந்து சற்று மேலே நின்றது. இதனால் சந்திரசேகரனை மீட்பதில் தீயணைப்பு வீரர்களுக்கு சற்று சிரமம் ஏற்பட்டது.

எனினும் தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு லிப்ட்டின் மேல்பகுதியை ஒரு எந்திரம் மூலமாக அறுத்து சந்திரசேகரனை பத்திரமாக மீட்டனர். இந்த போராட்டம் சுமார் 45 நிமிடங்கள் நடந்தது. லிப்ட்டில் சிக்கி தவித்த சந்திரசேகரன் மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். சரியான பராமரிப்பு இல்லாததால் லிப்ட் நடுவழியில் நின்றுவிட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com