உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் மானியம் - வருகிற 12-ந்தேதி கடைசி நாள்

வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் மானியம் பெற விண்ணப்பிக்க வருகிற 12-ந்தேதி கடைசி நாளாகும்.
உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் மானியம் - வருகிற 12-ந்தேதி கடைசி நாள்
Published on

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் தங்களின் பணிகளை செம்மையாகவும், சிறப்பாகவும், சமயப்பணி ஆற்றுவதற்கும் புதிய இருசக்கர வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் மானியம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ, அத்தொகை வழங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்க மானியமாக ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அத்தொகை வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற இருசக்கர வாகனம் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கியர் இல்லாத அல்லது ஆட்டோ கியர் கூடிய எஞ்சின் 125 சி.சி. சக்திக்கு மிகாமல் இருக்க வேண்டும். 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதிக்கு பிறகு தயார் செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களின் மனுதாரர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாட்டை சார்ந்தவராக இருக்க வேண்டும். 18 வயது முதல் 40 வயதுக்குள் இயக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது இருசக்கர வாகனம் கற்றுணர்வுக்கான (எல்.எல்.ஆர்) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பயனாளிகள் 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்களாக இருக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனத்தின் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் மானிய உதவி கோரி விண்ணப்பம் செய்தால் முன்னுரிமை அடிப்படையில் ஒருவருக்கு மட்டும் மானியதொகை வழங்கப்படும்.

விண்ணப்பதாரர் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வயது சான்றிதழ், வருமான சான்றிதழ், புகைப்படம், மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெற்ற சான்று, சாதிச்சான்று, ஓட்டுனர் உரிமம், கல்வி தகுதிச்சான்று, வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. குறியீட்டுடன் கூடிய வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்பில் பணிபுரிகிறார் என்ற சான்று பெற்று மாவட்ட வக்பு கண்காணிப்பாளர் மேலொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

விலைப்பட்டியல், விலைப்புள்ளி ஆகிய ஆவணங்களுடன், திருவாரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வேலை நாட்களில் நேரில் வந்து விண்ணப்பத்தினை பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய கடைசி நாள் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 12-ந் தேதியாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com