திருப்பூரில் நிவாரண பொருட்கள் வாங்க குவிந்த தொழிலாளர்கள்

திருப்பூரில் நிவாரண பொருட்கள் வாங்குவதற்காக ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்ட வெளிமாவட்ட, வெளிமாநில தொழிலாளர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூரில் நிவாரண பொருட்கள் வாங்க குவிந்த தொழிலாளர்கள்
Published on

அனுப்பர்பாளையம்,

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் திருப்பூரில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் போதிய வருமானம் இன்றி கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரண பொருட்கள் தொகுப்புடன், ரூ.1000 வழங்கியது. மேலும் ரேஷன் அட்டை இல்லாமல் திருப்பூரில் வசித்து வரும் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டையின் அடிப்படையில் நிவாரண பொருட்கள் வழங்கவும் முடிவு செய்தது.

இதன்படி வருவாய்த்துறை அதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் பயனாளிகளின் விவரங்களை சேகரித்து, அந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் வைத்து நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரேஷன் அட்டை இல்லாத வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த தகவலையடுத்து சுற்று வட்டாரத்தை சேர்ந்த பெண்கள், வெளிமாவட்ட, வடமாநில தொழிலாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை ஒரே நேரத்தில் அங்கு குவிந்தனர். மேலும் அவர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், சிலர் முககவசம் அணியாமலும் நின்று கொண்டிருந்தனர்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் கூட்டமாக நின்ற பொதுமக்களை இடைவெளிவிட்டு வரிசையில் நிற்க வைத்தனர். இதனால் சாலையின் இருபுறமும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, பொருட்களை வாங்கி சென்றனர். சிலருக்கு பொருட்கள் பின்னர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். திருப்பூரில் நிவாரண பொருட்களை வாங்க 500-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com