பல மாவட்டங்களில் துணிகள் வாங்கி, ரூ.1 கோடி மோசடி செய்த கும்பல் - போலீஸ் கமிஷனரிடம் வியாபாரிகள் மனு

பல மாவட்டங்களில் துணிகள் வாங்கி ரூ.1½ கோடி மோசடி செய்த 7 பேர் கொண்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரிடம் வியாபாரிகள் மனு கொடுத்து உள்ளனர்.
பல மாவட்டங்களில் துணிகள் வாங்கி, ரூ.1 கோடி மோசடி செய்த கும்பல் - போலீஸ் கமிஷனரிடம் வியாபாரிகள் மனு
Published on

ஈரோட்டை சேர்ந்த ரவிச்சந்திரன், திருப்பூரை சேர்ந்த மணிகண்டன், ராஜபாளையத்தை சேர்ந்த பீர்முகமது உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த துணி வியாபாரிகள் 10-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரிடம் ஒரு புகார் மனு கொடுத்து உள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

சேலம் சூரமங்கலத்தில் ஜவுளிக்கடை நடத்தி வந்த ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எங்களை அணுகி, சேலத்தில் துணி மொத்த வியாபாரம் செய்து வருகிறேன். என்னுடன் மேலும் 6 பேர் உள்ளனர். எனவே உங்களிடமிருந்து, துணிகள் மொத்தமாக வாங்கிக் கொள்கிறேன். அதற்கு முன்பணமாக 30 சதவீதம் கொடுக்கிறேன். மீதி பணத்தை 30 நாள் தவணையில் கொடுத்து விடுகிறேன், என்று கூறினார்.

இதை நம்பி நாங்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை ரூ.1 கோடிக்கு துணிகள் கொடுத்து உள்ளோம். அதற்கான பணத்தை அவர் கொடுக்கவில்லை. பல முறை தொடர்பு கொண்ட போது பதில் கூறிக்கொண்டே இருந்தார். பணம் தர மறுத்து வந்தார். தற்போது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

அவருடன் இருந்த மற்ற 6 பேரிடம் கேட்ட போது அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே துணிகள் வாங்கி ரூ.1 கோடி மோசடி செய்த 7 பேர் கொண்ட கும்பல் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் கமிஷனர் செந்தில் குமார், விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தர விட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com