

பூந்தமல்லி,
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இந்த ஊரடங்கு உத்தரவால் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றன.
தெருநாய்கள் மற்றும் மாடுகள் ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் கிடைக்கும் உணவு கழிவுகளையும், காய்கறி கடைகளில் வீசப்படும் காய்கறி கழிவுகளை உண்டு வந்தன. ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடைகள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டு உள்ளதுடன், திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளதால் இவைகள் உணவு இன்றி தவித்து வருகின்றன.
மாடுகளை வளர்ப்போர், அவற்றை தங்கள் பிள்ளைகள் போல் பராமரித்து வருகிறார்கள். தற்போது டீ கடை, ஓட்டல்கள் இல்லாததால் பால் விற்பனை வெகுவாக குறைந்துவிட்டது. பொதுமக்கள் பெரும்பாலானோர் பாக்கெட் பால் வாங்குவதால், மாட்டு உரிமையாளர்கள் பாலை அக்கம் பக்கத்தினருக்கு இலவசமாக கொடுத்தது போக மீதி பாலை வீணாக சாக்கடையில் கொட்டும் நிலை ஏற்பட்டு உள்ளது. போதிய வருமானம் இல்லாததால் மாடுகளுக்கு தீவனம் வாங்க முடியாமல் தவிக்கிறார்கள்.
அதிலும் தற்போது லாரிகள் ஓடாததால் கால்நடை தீவனங்கள் சரியாக வரவில்லை என்று கடைகளில் கூடுதல் விலைக்கு தவிடு, புண்ணாக்கு உள்ளிட்ட கால்நடை தீவனங்களை விற்கிறார்கள். வேறு வழி இன்றி அதையும் நீண்ட வரிசையில் கால்கடுக்க காத்து நின்று வாங்கி தங்கள் மாடுகளுக்கு கொடுக்கிறார்கள். அதற்கும் வசதி இல்லாதவர்கள் செய்வதறியாது தவிக்கிறார்கள். இதனால் கன்று குட்டிகள் உணவு கிடைக்காமல் பசியால் பிளாஸ்டிக் பைகளை சாப்பிடும் பரிதாப நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுபற்றி மாடுகளின் உரிமையாளர்கள் கூறியதாவது:-
ஊரடங்கு உத்தரவால் மாடுகளுக்கு தீவனம் சரிவர கிடைப்பதில்லை. முன்பு பொட்டு ஒரு முட்டை ரூ.1000 முதல் ரூ.1,100 வரை கொடுத்து வாங்கினோம். தற்போது ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
பெரும்பாலும் மாட்டு தீவனம் கிடைப்பதில்லை. தரம் குறைந்த மாட்டு தீவனங்கள் கிடைத்தாலும் அதுவும் விலை அதிகம். தவிடு சரிவர கிடைக் காததால் மாடுகள் பாலும் சரிவர கரப்பதில்லை. போதிய வருமானம் இல்லாததால் எங்களிடம் இருக்கும் ஒரு சில மாடுகளை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் மற்ற மாடுகளுக்கு தீவனங்கள் வாங்கி போட்டு பராமரித்து வருகிறோம். இதனால் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.