போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு இ-செலான் எந்திரம் மூலம் அபராதம் விதிக்கும் புதிய முறை-போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தொடங்கி வைத்தார்

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு இ-செலான் எந்திரம் மூலம் அபராதம் விதிக்கும் புதிய முறையை தர்மபுரியில் போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தொடங்கி வைத்தார்.
போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு இ-செலான் எந்திரம் மூலம் அபராதம் விதிக்கும் புதிய முறை-போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தொடங்கி வைத்தார்
Published on

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் சாலை போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காத நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்தல், அபராதம் விதித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக வாகன சோதனை நடக்கும் இடங்களில் அபாரதம் விதிக்கும் நடைமுறை இருந்து வந்தது. இந்த நடைமுறையை மாற்றி அமைக்கும் வகையில் தர்மபுரி மாவட்டத்தில் இ-செலான் எந்திரம் மூலம் உடனடி அபராதம் விதிக்கும் புதிய முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் முதல் கட்டமாக 15 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நடக்கும் வாகன சோதனையின்போது இந்த இ-செலான் எந்திரம் எனப்படும் மின்னணு எந்திரம் மூலம் அபராதம் விதிக்கும் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் இந்த புதிய முறையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தொடங்கி வைத்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள சாலையில் போலீசார் வாகனசோதனை நடத்தினார்கள். அந்தவழியாக ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மற்றும் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு இ-செலான் எந்திரம் மூலம் அபராத தொகை வசூலிக்கப்பட்டது. அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இந்த முறை குறித்து போலீஸ் சூப்பிரண்டு ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வாகன சோதனை நடத்தப்படும்போது அபராதம் வசூலிப்பதில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தவும், முறைகேடு தொடர்பாக எழும் புகார்களை தவிர்க்கவும், மின்னணு எந்திரத்தை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக அபராதம் விதிக்கும் நடைமுறை தர்மபுரி மாவட்டத்தில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. வாகனசோதனையின்போது விதிமுறை மீறல் தொடர்பாக சிக்குபவர்கள் தங்கள் டெபிட்கார்டுகளை பயன்படுத்தி உடனுக்குடன் அபராத தொகையை செலுத்தி அதற்குரிய ரசீதை பெறலாம்.

இந்த எந்திரத்தை பயன்படுத்துவது தொடர்பாக டெக்னிக்கல் பிரிவு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த பயிற்சியை பெற்றவர்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கும் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com