கிராமங்களில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

கிராமங்களில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
கிராமங்களில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு
Published on

கீரமங்கலம்,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் ஊரடங்கு உத்தரவை மதித்து பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே தங்கி உள்ளனர். இந்த நிலையில் புதுக் கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் இனாம் ஊராட்சியில் கீரமங்கலத்தில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி ஊராட்சி முழுவதும் சாலைகள், கட்டிடங்கள், வீடுகள் என பல இடங்களில் தெளிக்கப்பட்டது. அதேபோல கீரமங்கலம் பேரூராட்சி பகுதிகளிலும் நகரின் முக்கிய இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களிலும் கிராம எல்லைகளிலும் மஞ்சள் கலந்த தண்ணீரில் ஊருக்குள் நுழையும் நபர்கள் கைகளை கழுவுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் மேற்பனைக்காடு ஊராட்சி எல்லையில் இளைஞர்கள் செக்போஸ்ட் அமைத்து அந்த வழியாகச் செல்வோரை நிறுத்தி கை, கால்களை நன்றாக சோப்பு போட்டு கழுவிய பிறகே ஊருக்குள் அனுமதிக்கின்றனர். மேலும் பொதுமக்கள் வரும் வாகனங்களிலும் கிருமி நாசினி இளைஞர்களால் தெளிக்கப்பட்ட பிறகே ஊருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதேபோல் திருமயத்தில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பொன்னமராவதியில் வட்டாட்சியர் திருநாவுக்கரசு தலைமையில், அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஆவுடையார்கோவில் போலீஸ் நிலையம் சார்பில், நாகுடி பிரிவு ரோடு அருகே சுகாதார ஆய்வாளர் கவுதம் மற்றும் போலீசார் சாலைகளில் சுற்றுத்திரிந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

கீரனூர் பஸ் நிலையம், கடைவீதி, மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கீரனூர் தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளித்தனர்.

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் பாச்சிக்கோட்டை ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில், வி.ராசியமங்களம், மேலப்பட்டி, செவத்தியார்புரம், பாப்பான் விடுதி உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் இயற்கை கிருமிநாசினியான மஞ்சள் தூள், ஆவாரம் பூ, மாட்டு சாணம் மற்றும் பிளச்சிங் பவுடர் போன்றவற்றை தண்ணீரில் கலந்து ஒவ்வொரு வீடாக தெளித்து வருகின்றனர். இந்த பணியில் துணை தலைவர் பால்ராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் மற்றும் மக்கள் நல பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com