தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தில் அமித்ஷா உத்தரவின்பேரில் சி.பி.ஐ. விசாரணைக்கு எடியூரப்பா உத்தரவு-சித்தராமையா பேட்டி

தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் குறித்து அமித்ஷா உத்தரவின்பேரில் சி.பி.ஐ. விசாரணைக்கு எடியூரப்பா உத்தரவிட்டு இருப்பதாக சித்தராமையா கூறினார்.
தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தில் அமித்ஷா உத்தரவின்பேரில் சி.பி.ஐ. விசாரணைக்கு எடியூரப்பா உத்தரவு-சித்தராமையா பேட்டி
Published on

உப்பள்ளி,

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நேற்று பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கதக் மாவட்டத்திலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது சித்தராமையா பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்து கொண்டார். முன்னதாக அவர் உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மத்தியில் பா.ஜனதா ஆட்சி உள்ளது. வெள்ள பாதிப்பு குறித்து பிரதமர் மோடியை எடியூரப்பா நேரில் சந்தித்து பேசிவிட்டு வந்துள்ளார். ஆனால் மத்திய அரசு இதுவரை நிதி வழங்கவில்லை. 2009-ம் ஆண்டு இதே போல் வட கர்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் நேரில் வந்து வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். நிவாரண பணிகளுக்கு ரூ.1,600 கோடி நிதி வழங்கினார்.

ஆனால் எடியூரப்பா இதுவரை நிவாரண நிதி கேட்டு மத்திய அரசிடம் மனு கூட கொடுக்கவில்லை. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷாவை பார்த்தால் எடியூரப்பா பயப்படுகிறார். பாவம் அவருக்கு அதிக பயம் உண்டாகிறது. இவ்வாறு பயப்படுவது ஏன் என்று எடியூரப்பா கூற வேண்டும்.

பேசுவதற்கு அவருக்கு பயமாக இருந்தால், எங்களையாவது பிரதமரிடம் அழைத்து செல்ல வேண்டும். நிவாரண பணிகளுக்கு நிதி உதவி செய்யுங்கள் என்று நாங்களாவது கேட்கிறோம். எனக்கு கிடைத்துள்ள தகவல்படி ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

எனக்கு கண் அறுவை சிகிச்சை நடந்தது. அதனால் வெள்ளத்தின்போது என்னால் பாதிப்புகளை ஆய்வு செய்ய முடியவில்லை. இல்லாவிட்டால் மற்றவர்கள் குறை சொல்லும் அளவுக்கு நான் இருக்க மாட்டேன். அதற்காகவே நான் எனது மகனை அனுப்பி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்தேன்.

மந்திரிசபையை அமைக்க எடியூரப்பாவுக்கு அதிகாரம் உள்ளது. ஆனாலும் அவர் அமித்ஷாவை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். பா.ஜனதாவில் ஒரே இடத்தில் அதிகாரம் குவிந்துள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அங்கு எந்த மாதிரி தீர்ப்பு வரப்போகிறது என்பதை பார்க்க வேண்டும்.

தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டதில் எனது பெயரை எடியூரப்பா தேவை இல்லாமல் கூறுகிறார். இது 100 சதவீதம் பொய். அமித்ஷா உத்தரவின்பேரில், சி.பி.ஐ. விசாரணைக்கு எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். பாரபட்சம், அரசியல் உள்நோக்கம் இல்லாமல் விசாரணை நடத்த வேண்டும்.

எடியூரப்பா எனது ஆலோசனையை கேட்பதாக இருந்தால், ஆபரேஷன் தாமரை குறித்தும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதிலும் கோடிக்கணக்கான ரூபாய் பேரம் நடந்துள்ளது. சி.பி.ஐ.க்கு பதிலாக எஸ்.ஐ.டி. அல்லது சி.ஐ.டி. மூலம் விசாரணை நடத்த முடிவு செய்திருக்க வேண்டும். சி.பி.ஐ. அமைப்பை தவறாக பயன்படுத்திகொள்ள வேண்டும் என்பது பா.ஜனதாவின் நோக்கம்.

ஆபரேஷன் தாமரை விஷயத்தில் எடியூரப்பா நடத்திய பேரம் குறித்து ஆடியோ உரையாடல் வெளியானது. அதுகுறித்து முதல்-மந்திரி குமாரசாமி எஸ்.ஐ.டி. விசாரணை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அதை குமாரசாமி செய்யவில்லை. விசாரணை நடத்தியிருந்தால் உண்மைகள் வெளிவந்திருக்கும். இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com