

ஈரோடு,
ஈரோடு மாநகராட்சி சார்பில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு பஸ் நிலையத்தில் பஸ் பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பஸ் பயணிகளுக்கு வழங்கினார்.
மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் பஸ்களில் ஒட்டப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பஸ் பயணிகள் தங்களது கைகளை கழுவ பஸ் நிலையத்தில் தண்ணீர் வசதி மற்றும் கிருமி நாசினி வைக்கப்பட்டு உள்ளது. இதை பொதுமக்கள் ஏராளமானோர் பயன்படுத்தி வருகிறார்கள். முன்னதாக கைகளை எவ்வாறு கழுவ வேண்டும் என்று கலெக்டர் செய்து காட்டினார்.
அதைத்தொடர்ந்து கலெக்டர் சி.கதிரவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. தாய்லாந்தில் இருந்து வந்த 5 பேர் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அவர்களது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதன் முடிவு கிடைத்த உடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வெளிநாட்டில் இருந்து வந்த 60 பேரில் 46 பேரின் ரத்த பரிசோதனை முடிவு வந்துள்ளது. இதில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. மற்றவர்களின் ரத்த பரிசோதனை முடிவு வந்த பிறகு தான் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா, இல்லையா என்பது தெரியவரும்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களை பரப்பிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இனி யாரும் கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். மீறி யாரேனும் தவறான தகவல் பரப்பினால் அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.
வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படி பணிபுரிந்து வந்ததில் 120 பேர் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் மீண்டும் ஈரோடுக்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மேலும் இங்கு தங்கி பணிபுரியும் வெளிமாநிலத்தவர்களில் ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் ஈரோடுக்கு திரும்பி வர வேண்டாம் என்று அந்தந்த நிறுவனத்திடம் வலியுறுத்தி உள்ளோம்.
காய்கறி மார்க்கெட், மளிகைக்கடை, பால், உணவகங்கள் போன்றவை உரிய பாதுகாப்புடன் செயல்படும். அதிகமாக மக்கள் கூடும் நகைக்கடை, ஜவுளிக்கடை போன்றவை மூடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு முதல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 பெரிய கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேநேரம், ஆகம விதிப்படி கோவில்களில் அனைத்து பூஜைகளும் நடக்கிறது.
இதேபோல் பள்ளிவாசல், ஆலயங்களில் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களை வைத்து வழிபாடு செய்ய வலியுறுத்தி உள்ளோம். அரசிடம் இருந்து வரும் அனைத்து வழிமுறைகளும் ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து பின்பற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், சுகாதார பணிகள் இணை இயக்குனர் சவுண்டம்மாள் சுகாதார ஆய்வாளர் கண்ணன், ஒப்பந்ததாரர் செல்வராஜ் உட்பட பலர் உடன் இருந்தனர்.