அலையில் சிக்கிய மகன்-2 பேரை காப்பாற்ற முயற்சி: கேபிள் டி.வி. ஆபரேட்டர் கடலில் மூழ்கி சாவு

கோட்டக்குப்பம் அருகே அலையில் சிக்கிய மகன் மற்றும் 2 பேரை காப்பாற்ற முயன்ற போது கேபிள் டி.வி. ஆபரேட்டர் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
அலையில் சிக்கிய மகன்-2 பேரை காப்பாற்ற முயற்சி: கேபிள் டி.வி. ஆபரேட்டர் கடலில் மூழ்கி சாவு
Published on

வானூர்,

புதுச்சேரி மாநிலம் ஆலங்குப்பம் சஞ்சீவிநகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 46), கேபிள் டி.வி.ஆபரேட்டர். நேற்று காணும் பொங்கலையொட்டி குணசேகரனும், அவருடைய மகன் மோகன்தாஸ் (15), மோகன்தாசின் நண்பர் ராகவன் (15), இவரது அண்ணன் கார் டிரைவர் லோகேஷ் (25) ஆகியோர் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தை அடுத்த தந்திராயன்குப்பம் கடற்கரைக்கு சென்றனர். அங்கு மோகன்தாஸ், ராகவன், லோகேஷ் ஆகிய 3 பேரும் கடலில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென எழுந்த பெரிய கடல் அலையில் 3 பேரும் சிக்கிக்கொண்டனர்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குணசேகரன், விரைந்து சென்று அவர்கள் 3 பேரையும் காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரும் கடல் அலையில் சிக்கிக்கொண்டார். உடனே அவர்கள் 4 பேரும் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டதும் அருகில் இருந்த மீனவர்கள் விரைந்து சென்று 4 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்கள் 4 பேரும் மயங்கிய நிலையில் இருந்ததால், உடனடியாக கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து ஆம்புலன்ஸ் மூலம் 4 பேரையும் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே குணசேகரன் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com