தொழுநோயாளிகள் மறுவாழ்வு இல்லம் திறக்கப்படுமா? ரூ.1 கோடியில் கட்டப்பட்டு காட்சி பொருளாக மாறிய கட்டிடம்

தஞ்சை அருகே மனையேரிப்பட்டியில் ரூ.1 கோடியில் கட்டப்பட்ட தொழுநோயாளிகள் மறுவாழ்வு இல்லம் காட்சி பொருளாக மாறி உள்ளது. இதை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொழுநோயாளிகள் மறுவாழ்வு இல்லம் திறக்கப்படுமா? ரூ.1 கோடியில் கட்டப்பட்டு காட்சி பொருளாக மாறிய கட்டிடம்
Published on

கள்ளப்பெரம்பூர்,

தஞ்சை மாவட்டம் புதுக்குடி அருகே மனையேரிப்பட்டியில் தொழுநோயாளிகள் மறுவாழ்வு இல்லம் இயங்கி வருகிறது. இங்கு குடும்பத்தினரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற தொழுநோயாளிகள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். நூற்றுக்கணக்கான தொழுநோயாளிகள் தங்கி இருந்த இந்த மறுவாழ்வு இல்லத்தில் தற்போது 60 தொழு நோயாளிகள் மட்டுமே உள்ளனர். இதில் 25 பேர் பெண்கள். 35 பேர் ஆண்கள். பெரும் பாலானவர்கள் முதியவர்கள்.

இங்கு உள்ள பழைய கட்டிடத்தில் தொழுநோயாளிகள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த கட்டிடம் முற்றிலும் சேதம் அடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. பழைய கட்டிடத்துக்கு அருகே உள்ள கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படாமல் காட்சி அளிக்கின்றன.

பரிதாபம்

சேதம் அடைந்த கட்டிடம் மற்றும் பராமரிப்பு இல்லாத கழிவறைகள் என தொழு நோயாளிகளின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. அபாய நிலையில் உள்ள பழைய கட்டிடத்துக்கு அருகே பொதுப்பணித்துறை சார்பில் ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் புதிதாக மறுவாழ்வு இல்லம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய இல்லம் திறக்கப்படாமல் காட்சி பொருளாக மாறி விட்டது.

20 அறைகள் மற்றும் பல்வேறு வசதிகள் இருந்தும், புதிய இல்லம் திறக்கப்படாமல் பூட்டி கிடப்பது பல்வேறு தரப்பினரையும் வேதனை அடைய செய்துள்ளது. இந்த இல்லத்துக்கான சாவியும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் புதிய இல்லம் திறக்கப்படாததால் தொழு நோயாளிகள் பழைய கட்டிடத்தில் மிகவும் சிரமத்துடன் வசித்து வருகிறார்கள். தொழு நோயாளிகளை கண்காணிக்க 5 வார்டன்கள் இங்கு பணியாற்றி வந்தனர். தற்போது ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார்.

ஊழியர்கள் பற்றாக்குறை

இங்குள்ள அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. தொழு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒரு டாக்டர் மட்டுமே இங்கு வந்து செல்கிறார். இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட மறுவாழ்வு இல்லத்தை திறந்து அங்கு தொழுநோயாளிகளை தங்க வைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இங்கு வசித்து வரும் தொழு நோயாளிகள் கூறியதாவது:-

குடும்பத்தாலும், சமூகத்தாலும் கைவிடப்பட்ட நிலையில் மறுவாழ்வு இல்லத்தில் தங்கி உள்ளோம். இங்கு பழைய கட்டிடத்தில் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. கட்டிடம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. போதுமான டாக்டர்கள், வார்டன்கள், பணியாளர்கள், அலுவலர்கள் இங்கு பணியில் இல்லை. அரசு ஆதரவு மட்டுமே எங்களுக்கு உள்ளது. எனவே இந்த இல்லத்தில் தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். தரமான உணவு வழங்க வேண்டும்.

பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்

புதிதாக கட்டப்பட்ட மறுவாழ்வு இல்லத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். முன்பு இங்கிருந்த ஆம்புலன்ஸ் பழுதடைந்து விட்டது. அதன் பிறகு புதிய ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்படவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர். புதிய கட்டிடம் திறக்கப்படுவது குறித்து உயர் அதிகாரிகள் தான் முடிவு செய்வார்கள் என்று இங்கு உள்ள அலுவலர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com