போலீசாரின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி ஊருக்குள் நுழையும் கரும்பு வாகனங்களால் பொதுமக்கள் அவதி

பள்ளிப்பட்டு நகருக்குள் போலீசாரின் எச்சரிக்கையை மீறி நினைத்த நேரத்தில் கரும்பு வாகனங்கள் நுழைந்ததால் வாகன நெரிசலால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.
போலீசாரின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி ஊருக்குள் நுழையும் கரும்பு வாகனங்களால் பொதுமக்கள் அவதி
Published on

கரும்பு வாகனங்கள்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நகரத்திற்கு 4 கிலோமீட்டர் தொலைவில் தனியார் சர்க்கரை ஆலை ஆந்திர மாநில பகுதியில் உள்ளது. இந்த சர்க்கரை ஆலைக்கு பள்ளிப்பட்டு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த கரும்பு விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட கரும்புகளை அதிக அளவில் வாகனத்தில் ஏற்றி சர்க்கரை ஆலைக்கு அனுப்புகின்றனர். இப்படி வரும் வாகனங்களால் பள்ளிப்பட்டு நகரில் பள்ளி நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. உடல் நலம் குன்றிய நோயாளிகளும் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

இந்த நிலையில் பள்ளிப்பட்டு போலீசார் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை கரும்பு வாகனங்கள் பள்ளிப்பட்டு நகருக்குள் நுழைய தடை செய்து எச்சரிக்கை போர்டுகள் வைத்தனர். ஆனால் கரும்புகளை ஏற்றி வரும் வாகனங்கள் அனைத்தும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வாகனங்களை ஓட்டி வரும் டிரைவர்கள் போலீசாரின் இந்த எச்சரிக்கையை அலட்சியம் செய்துவிட்டு நினைத்த நேரத்தில் நகருக்குள் செல்கின்றனர்.

பொதுமக்கள் அவதி

நேற்று காலை 9 மணியளவில் அதிக பாரத்துடன் கரும்பு ஏற்றி வந்த வாகனத்தால் பள்ளிப்பட்டு மும்முனை சாலை சந்திப்பில் 20 நிமிடம் போக்குவரத்து தடைபட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

அரசு அலுவலகங்களுக்கு பணிக்கு செல்லும் அலுவலர்களும் அவதிப்பட்டனர். ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இந்த போக்குவரத்து நெரிசலை சரி படுத்த முடியாமல் திணறினார்கள். கண்ட நேரத்தில் பள்ளிப்பட்டு நகருக்குள் கரும்பு வாகனங்கள் நுழையும் போது போலீசாரின் இந்த எச்சரிக்கை பலகை எதற்கு என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com