

பெங்களூரு:
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜமீர்அகமதுகான் எம்.எல்.ஏ. சிந்தகியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முஸ்லிம் வேட்பாளர்கள்
இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் ஜனதா தளம் (எஸ்) முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பா.ஜனதாவுக்கு உதவும் நோக்கத்தில் அக்கட்சி முஸ்லிம் வேட்பாளர்களை போட்டியிட வைத்துள்ளது. பா.ஜனதாவினர் முஸ்லிம் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு வாக்களிக்குமாறு கூறுகிறார்கள். குமாரசாமி ஆதாயம் இல்லாமல் எந்த பணியும் செய்வது இல்லை.
சிந்தகியில் சூட்கேஸ் வந்ததால் இந்த தொகுதியில் மட்டுமே குமாரசாமி பிரசாரம் செய்கிறார்கள். நேற்று (நேற்று முன்தினம்) தான் ஹனகல் தொகுதியில் இருந்து சூட்கேஸ் வந்திருக்கும். அதனால் இப்போது ஹனகல் தொகுதிக்கு சென்று குமாரசாமி பிரசாரம் செய்கிறார். அவர் ஆர்.எஸ்.எஸ். பற்றி விமர்சனம் செய்கிறார். அந்த அமைப்பினரின் அறிவுறுத்தலின் பேரிலேயே குமாரசாமி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை விமர்சிக்கிறார்.
நாய்கள் குரைப்பது...
என்னை தேவேகவுடா தான் எம்.எல்.ஏ. ஆக்கினார். குமாரசாமி எதையும் செய்யவில்லை. தேவேகவுடா 100 சதவீதம் மதசார்பின்மையை கடைபிடிக்கிறார். ஆனால் குமாரசாமி அவ்வாறு இல்லை. காங்கிரசை தோற்கடிக்கவே ஜனதா தளம் (எஸ்) முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இதன் மூலம் அவர் முஸ்லிம்களை பலிகடா ஆக்குகிறார். ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு வாக்களித்தால், அது பா.ஜனதாவுக்கு தான் செல்லும்.
இவ்வாறு ஜமீர்அகமதுகான் கூறினார்.
இதுகுறித்து மைசூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த குமாரசாமி, "யானை நடந்து செல்லும்போது நாய்கள் குரைப்பது வழக்கம். அத்தகைய நாய்களுக்கு எல்லாம் என்னால் பதிலளிக்க முடியாது. நான் பதிலளிக்கும் அளவுக்கு அவர் தகுதியான ஆள் இல்லை. அதனால் அவரை பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்" என்றார். ஜமீர்அகமதுகான் நாய்களுக்கு சமமானவர் என்பது போல் குமாரசாமி கருத்து தெரிவித்துள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது.