

காங்கேயம்,
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள கீரனூர் கிராமம் கவலக்காட்டுவலசு என்ற ஊரை சேர்ந்தவர் சுந்தரம்(வயது 62). இவர் அங்குள்ள நால்ரோட்டில் கல் உடைக்கும் ஆலை வைத்து நடத்தி வந்தார்.
இவர் நேற்று தனது மோட்டார்சைக்கிளில் காங்கேயம்-சென்னிமலை ரோட்டில் அங்குள்ள ஒரு ஒர்க்ஷாப்பிற்கு சென்று கொண்டிருந்தார்.
பின்னர் அங்குள்ள எடை மேடை அருகே சென்றதும் சாலையின் வலது புறம் திரும்புவதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது அவருக்கு பின்னால் காங்கேயத்தில் இருந்து சென்னிமலை நோக்கி வந்த கார் ஒன்று, சுந்தரம் மீது பயங்கரமாக மோதியதோடு சாலையோர பள்ளத்தில் இறங்கியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சுந்தரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆனால் காரில் சென்றவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
இது விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.