சினிமா பட பாணியில் கார் திருட்டு

சினிமா பட பாணியில் கார் ஷோரூமுக்கு வாடிக்கையாளர் போல் வந்து சோதனை ஓட்டத்திற்கு எடுத்து காரை கடத்திய 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
சினிமா பட பாணியில் கார் திருட்டு
Published on

சிவமொக்கா: சினிமா பட பாணியில் கார் ஷோரூமுக்கு வாடிக்கையாளர் போல் வந்து சோதனை ஓட்டத்திற்கு எடுத்து காரை கடத்திய 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

சினிமா படம் பாணியில்...

தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு தெரிந்த ஒருவர் ஸ்கூட்டர் வாங்க முயற்சிப்பார். அப்போது அவர், வடிவேலு-அவரது நண்பர்களை உரிமையாளரிடம் நம்பிக்கைக்கு நிற்க வைத்துவிட்டு ஸ்கூட்டரை சோதனை ஓட்டத்திற்கு எடுத்து செல்வது போல் ஸ்கூட்டரை அபேஸ் செய்துவிட்டு சென்றிடுவார்.

இதுபோன்ற சம்பவம் கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

வாடிக்கையாளர் போல் வந்து...

சிவமொக்கா டவுன் வாதி எஹூதா பகுதியில் புதிய மேம்பாலம் அருகே கார் ஷோரூம் ஒன்று உள்ளது. இங்கு பழைய கார்கள் வாங்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கார் ஷோரூமிற்கு வாடிக்கையாளர் போல் 4 பேர் வந்தனர். அவர்கள், கார் ஷோரூமில் பழைய கார் வாங்க வந்ததாக ஊழியர்களிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் 4 பேரும் ஒரு காரை தேர்ந்தெடுத்து வாங்க விருப்பம் தெரிவித்தனர். மேலும் காரை சோதனை ஓட்டம் செய்து விட்டு வாங்குவதாகவும் உரிமையாளிரிடம் கூறியுள்ளனர்.

இதற்கு கார் ஷோரூம் உரிமையாளர் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி காரை 4 பேரில் ஒருவர் ஓட்ட மற்ற 3 பேர் அமர்ந்து இருந்தனர். இவர்களுடன் கார் ஷோரூம் ஊழியர் ஒருவர் சென்றுள்ளார்.

கார் கடத்தல்

இதையடுத்து 2 கிலோ மீட்டர் தூரம் வரை காரை ஓட்டிச் சென்றுள்ளனர். பின்னர் எம்.ஆர்.எஸ். சதுக்கம் அருகே காரை திடீரென நிறுத்திய அவர்கள், ஷோரூம் ஊழியரிடம் தனது நண்பர் ஒருவர் இப்பகுதியில் நின்று கொண்டிருப்பதாகவும், அவரிடம் காரை காட்டி முன்இருக்கையில் அமர்த்த உள்ளோம்.

அதனால் நீங்கள்(ஷோரூம் ஊழியர்) கீழே இறங்கி காரின் பின் இருக்கையில் அமரும்படி கூறியுள்ளனர். இதை உண்மையென நம்பிய ஷோரூம் ஊழியரும் காரில் இருந்து கீழே இறங்கி பின் இருக்கையில் அமர முயன்றார். ஆனால் அவர்கள், ஷோரூம் ஊழியர் கீழே இறங்கியதும் காரை மின்னல் வேகத்தில் ஓட்டி தப்பிச் சென்றுவிட்டனர்.

4 பேருக்கு வலைவீச்சு

இதனால் கார் ஷோரும் ஊழியர் செய்வதறியாது திகைத்து போனார். அப்போது தான் ஷோரூம் ஊழியருக்கு, கார் வாங்குவதுபோல் வந்து சோதனை ஓட்டத்திற்கு எடுத்து மர்மநபர்கள் காரை திருடிச் சென்றதை உணர்ந்தார். இதுபற்றி அவர், ஷோரூம் உரிமையாளரிடம் தெரிவித்தார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த கார் ஷோரூம் உரிமையாளர் துங்கா நகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை கடத்தி சென்ற மர்ம நபர்கள் 4 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com