அரக்கோணம் அருகே சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து - பயணிகள் கடும் அவதி

அரக்கோணம் அருகே கார்களை ஏற்றிச்செல்லும் சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடுமையாக அவதிப்பட நேர்ந்தது.
அரக்கோணம் அருகே சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து - பயணிகள் கடும் அவதி
Published on

அரக்கோணம்,

திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கார்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் கார்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்படுகின்றன. இதற்காக கார்கள் கன்டெய்னர்களில் ஏற்றப்பட்டு அவை அரக்கோணம் அருகே உள்ள மேல்பாக்கம் பகுதியில் உள்ள ஏற்றுமதி முனையத்திற்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்கிருந்து சரக்கு ரெயில்களில் அவை இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

நேற்று பெங்களூருவில் இருந்து கார்களை ஏற்றி செல்வதற்காக காலியான 27 கன்டெய்னர் பெட்டிகளுடன் சரக்கு ரெயில் காட்பாடி வழியாக அரக்கோணத்தை நோக்கி சென்றது. அதிகாலை 3.30 மணியளவில் அந்த சரக்கு ரெயில் மேல்பாக்கம் யார்டு பகுதியில் உள்ள முனையத்திற்குள் வந்து கொண்டிருந்தது.

மெயின் லைனில் இருந்து லூப் லைனில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தட தடவென பயங்கர சத்தம் கேட்டது. அப்போது ரெயில்பெட்டிகளும் குலுங்கவே விபரீதத்தை உணர்ந்த என்ஜின் டிரைவர் சமயோசிதமாக செயல்பட்டு சரக்கு ரெயிலின் வேகத்தை குறைத்து நிறுத்தினார். அப்போது 8 பெட்டிகள் லூப் லைனுக்குள் வந்து விட்டன. மீதம் உள்ள 19 பெட்டிகள் மெயின் லைனில் நின்றன.

இறங்கி வந்துபார்த்தபோது சரக்கு ரெயிலின் 5, 6-வது பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து இறங்கி தடம் புரண்டு நின்றது தெரியவந்தது. சரக்கு ரெயில் தடம் புரண்டதால் தண்டவாளத்தில் இருந்த சிலிப்பர் கட்டைகள், அவற்றை தண்டவாளத்துடன் இணைக்கும் இரும்பு வளையங்கள் ஆகியவை சேதமடைந்திருந்தன.

மெயின்லைனில் சரக்கு ரெயிலின் எஞ்சிய பெட்டிகள் நின்றதால் காட்பாடி- சென்னை மார்க்கத்தில் ரெயில்போக்குவரத்து பாதிக் கப்பட்டது. தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் காட்பாடியிலிருந்து அரக்கோணம் வந்த ரெயில்களை ஆங்காங்கே உள்ள ரெயில் நிலையங்களில் நிறுத்த உத்தரவிட்டனர்.

அதன்படி சென்னை செல்லும் புளூமவுண்டன், மங்களூரு, ஆலப்புழா, சேரன், காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனை தொடர்ந்து சென்னை கோட்ட மேலாளர் மகேஷ், ரெயில்வே உயர் அதிகாரிகள், பொறியாளர்கள், அரக்கோணம் ரெயில் நிலைய மேலாளர் ராதாகிருஷ்ணன், அரக்கோணம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

உடனடியாக காட்பாடி மற்றும் அரக்கோணத்திலிருந்து மெக்கானிக்கல் பிரிவு மீட்பு படையினர் விபத்து நடந்த இடத்துக்கு தனி ரெயிலில் நவீன எந்திரங்களுடன் வரவழைக்கப்பட்டனர்.

முதல்கட்டமாக மெயின் லைனில் நின்ற 19 பெட்டிகளை இழுத்துச்செல்ல மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு இணைக்கப்பட்டது. அதன் மூலம் 19 பெட்டிகளும் மாற்றுப்பாதையில் நிறுத்தப்பட்டன. இதன்பின் நடுவழியில் நின்ற ரெயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டு சென்றன. தற்போது கோடைகாலம் என்பதால் புழுக்கத்தின் காரணமாக பயணிகள் கடுமையாக அவதிப்பட நேர்ந்தது. சுமார் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதத்துக்கு பின் ரெயில்போக்கு வரத்து சீரானது.

இதனை தொடர்ந்து ஹைட்ராலிக் ஜாக்கி மூலம் தடம்புரண்ட பெட்டிகள் தண்டவாளத்தில் நிலைநிறுத்தப்பட்டு அந்த பெட்டிகளும் வேறு பகுதிக்கு இழுத்துச்செல்லப்பட்டன. பின்னர் சேதம் அடைந்த சிலிப்பர்கட்டைகள், இரும்பு வளையங்கள் மீட்பு குழுவினரால் சரி செய்யப்பட்டு சீரமைப்பு பணிகள் நடந்தன. தொடர்ந்து அந்த பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு ரெயில்பாதை சரியாக இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

இது குறித்து துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது. மேல்பாக்கம் யார்டு பகுதியில் அடிக்கடி சரக்கு ரெயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி வருகிறது. இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து ஏற்படாத வகையில் ரெயில்வே உயர் அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com