வெள்ள தணிப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கீடு எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள தணிப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
வெள்ள தணிப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கீடு எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110-விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது.

வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் விளைவாக அடையாறு, ஆரணியாறு, கொசஸ்தலையாறு, கூவம் மற்றும் கோவளம் ஆற்றுப்படுகைகளில், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் மற்றும் ஊரக பகுதிகளிலுள்ள குடியிருப்புகள் நீரில் மூழ்குகின்ற நிலைமை அவ்வப்போது ஏற்படுகின்றது.

அப்பகுதிகளில் வெள்ள தணிப்புப்பணிகளை மேற்கொள்வதற்காக நடப்பாண்டில் மாநில நிதியிலிருந்து 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். அதிக பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளைக்கண்டறிந்து, அப்பகுதிகளில் வெள்ளநீர் தங்கு தடையின்றி வெளியேற்றப்படும் வகையில், தொடர்புடைய ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய்கள் அமைத்தல், மூடிய கால்வாய்களை புனரமைத்தல், பாசனமில்லாத ஏரிகளை ஆழப்படுத்தி நீர்த்தேக்கங்களாக மாற்றுதல், வெள்ளக்கட்டுப்பாட்டு அமைப்பினை ஏற்படுத்துதல், உபரி நீர் கால்வாய்கள் மற்றும் சாலையோர கால்வாய்களை அகலப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா வாடிக்கையாளர்களை கவரவும், சந்தை வாய்ப்பினை பெருக்கவும், விற்பனை நிலையங்களை புதுப்பித்து நவீனமயமாக்கும் நோக்கில், சென்னை, திருச்சி மற்றும் தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் பூம்புகார் விற்பனை நிலையங்கள், ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பொலிவு பெற அழகுபடுத்தப்படும்.

பூம்புகார் நிறுவனம் சார்பில் நடப்பாண்டு முதல், உலக அளவிலான கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் நடத்தப்படும். சர்வதேச வர்த்தக நிறுவனங்களான இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் மற்றும் கைவினை பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் உடன் இணைந்து இக்கண் காட்சி 2 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும். கைவினைஞர்கள் உற்பத்தி செய்யும் கைவினைப் பொருட்களுக்கு மிகச்சிறந்த சந்தை வாய்ப்பு ஏற்படுத்துவதற்கும், வருவாய் பெருக்குவதற்கும், ஏற்றுமதி அதிகரிப்பதற்கும் மற்றும் அன்னிய செலாவணி ஈட்டுவதற்கும் இக்கண்காட்சி வழிவகுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com