திருப்பத்தூரில் விபத்தில் சிக்கிய வாலிபரை தூக்கிச் சென்று செல்போன், பணம் பறிப்பு

திருப்பத்தூரில் விபத்தில் சிக்கி மயக்கமடைந்த வாலிபரை தூக்கிச்சென்று செல்போன் மற்றும் பணத்தை பறித்துச்சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூரில் விபத்தில் சிக்கிய வாலிபரை தூக்கிச் சென்று செல்போன், பணம் பறிப்பு
Published on

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் தாலுகா ரெட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (வயது 27). பெங்களூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் திருப்பத்தூர் தாலுகா ஆதியூர் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள சினிமா தியேட்டர் அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார்சைக்கிள், விநாயகமூர்த்தி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் விநாயகமூர்த்தி பலத்த காயமடைந்து அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

செல்போன், பணம் பறிப்பு

இதை பார்த்த மர்ம நபர்கள் அவருடைய செல்போன், பணத்துடன் பர்ஸ் மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் ஆகிவற்றை திருடி உள்ளனர். மேலும் அவரை மோட்டார்சைக்கிளில் அமரவைத்து திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி எதிரே உள்ள கற்பகம் சூப்பர் மார்க்கெட் அருகே வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

பின்னர் குடும்பத்தினர் தேடிவந்து பார்த்தபோது அங்கேயே மயங்கி கிடந்த விநாயகமூர்த்தியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் இதுபற்றி தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிளை கைப்பற்றினர். மேலும் செல்போன் மற்றும் பணத்தை திருடிக்கொண்டு மயக்கத்தில் இந்த விநாயகமூர்த்தியை தூக்கி வீசிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். விபத்தில் காயமடைந்த நபரை தூக்கிச்சென்று செல்போன் மற்றும் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com