கண்மாயில் மீன் வளர்க்க அதிகாரிகள் அனுமதி மறுப்பதாக வழக்கு - கலெக்டர் நடவடிக்கை எடுக்க, ஐகோர்ட்டு உத்தரவு

குத்தகை பணம் செலுத்தியும் கண்மாயில் மீன் வளர்க்க அதிகாரிகள் அனுமதி மறுப்பதாக கூறிய வழக்கில், கலெக்டர் நடவடிக்கை எடுக்க, ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கண்மாயில் மீன் வளர்க்க அதிகாரிகள் அனுமதி மறுப்பதாக வழக்கு - கலெக்டர் நடவடிக்கை எடுக்க, ஐகோர்ட்டு உத்தரவு
Published on

மதுரை,

மதுரையை அடுத்த ஒய்.கொடிக்குளம் அயிலாங்குடியை சேர்ந்த சித்தம்மாள், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை அயிலாங்குடி பெரிய கண்மாயை 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தோம். அதன்படி முதல் 3 ஆண்டுகள் அந்த கண்மாயில் மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்து வந்தோம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக மழை பெய்யாததால் கண்மாயில் மீன்கள் வளர்க்க முடியவில்லை. இதனால் நஷ்டம் ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் 2018-19-ம் ஆண்டுக்கான குத்தகை தொகை ரூ.1 லட்சத்து 78 ஆயிரத்து 281-ஐயும், நலவாரிய நிதியாக ரூ.8 ஆயிரத்து 858-ஐயும் செலுத்திவிட்டோம். இதற்கிடையே கண்மாய்கள் பராமரிப்பு தொடர்பான வழக்கில் நீர்நிலைகளில் மீன்கள் வளர்க்கக்கூடாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே அயிலாங்குடி பெரிய கண்மாயில் மீன் வளர்க்கக்கூடாது என்று அதிகாரிகள் தடுத்து வருகின்றனர். ஆனால், இந்த கண்மாயை பொறுத்தவரையில், கண்மாயில் இருந்து தண்ணீரை வெளியேற்றாமலேயே மீன்களை பிடித்து வருகிறோம். ஆனாலும் மீன்கள் வளர்க்க அனுமதிக்கப்படவில்லை. எனவே 2014-ம் ஆண்டில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அயிலாங்குடி பெரிய கண்மாயில் நாங்கள் மீன் வளர்க்க அனுமதிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் நாங்கள் செலுத்திய ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 139-ஐ 12 சதவீத வட்டியுடன் திருப்பி கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எம்.தண்டபாணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், மனுதாரரின் கோரிக்கை குறித்து மதுரை கலெக்டர் 4 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com