காவிரி பிரச்சினையில் சாதி, மதம் கடந்து அனைவரும் ஒற்றுமையுடன் போராடினால் தான் வெற்றி கிடைக்கும்

காவிரி பிரச்சினையில் சாதி, மதம் கடந்து அனைவரும் ஒற்றுமையுடன் போராடினால் தான் வெற்றி கிடைக்கும் என்று நீடாமங்கலத்தில் வைகோ பேசினார்.
காவிரி பிரச்சினையில் சாதி, மதம் கடந்து அனைவரும் ஒற்றுமையுடன் போராடினால் தான் வெற்றி கிடைக்கும்
Published on

நீடாமங்கலம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்துக்கு நேற்று முன்தினம் இரவு வைகோ வந்தார். பின்னர் அவர் திறந்த வேனில் நின்றபடி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கர்நாடகத்தில் புதிதாக யார் ஆட்சிக்கு வந்தாலும் அணை கட்டுவார்கள். இதனால் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் தண்ணீரின்றி விவசாயம் பாதிக்கப்படும். கர்நாடகம் அணை கட்டுவதை நாம் தடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் தான் கர்நாடக மாநிலம் புதிதாக அணை கட்ட முடியாது. காவிரி பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்துக்கு பிரதமர் மோடி அலுவலகத்தில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. ஒரு மணி நேரம் சந்தித்து பேச பிரதமர் மோடியால் முடியாதா?, ஆனால் தமிழக அரசு, மத்திய அரசின் காலடியில் வீழ்ந்து கிடக்கிறது. அதனால் தான் மத்திய அரசு, தமிழர்களை கிள்ளுக்கீரையாக நினைக்கிறது.

தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்கவில்லையென்றால் 25 லட்சம் ஏக்கர் நிலம் பாதிப்படையும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசு அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டங்களை நடத்த வேண்டும். அமைதி வழியில், அறவழியில் நம்முடைய போராட்டம் அமைய வேண்டும். காவிரி பிரச்சினையில் இளைஞர்கள், மாணவர்கள் என எல்லோரும் சாதி, மதம் கடந்து அனைவரும் ஒற்றுமையுடன் போராடினால் தான் வெற்றி கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கே.கலைவாணன், நீடாமங்கலம் ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் ராஜமாணிக்கம், நகர செயலாளர் மாருதி தியாகராஜன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, நகர செயலாளர் ராஜசேகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் தமிழார்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com