கல்விக் கோவிலில் சாதி பாகுபாடா?

சாதி என்பது நம் நாட்டில் கொடுமையான விஷயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் பள்ளிகளிலே சாதி வேற்றுமை உள்ளது.
கல்விக் கோவிலில் சாதி பாகுபாடா?
Published on

மாணவர்களை தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என பிரித்து சலுகை வழங்குகிறார்கள். பள்ளியில் சேர்ந்த முதல் நாளே ஆசிரியர்கள், மாணவர்களிடம் கேட்கும் கேள்வி நீ எந்த சாதி என்பதுதான். ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்டோர் உயர்வுக்காக பலரும் போராடினார்கள். ஆனால் இப்போது அனைவரும் உயர போராட வேண்டும்.

முதல் பந்தி தாழ்த்தப்பட்டோருக்கு, இரண்டாவது பந்தி பிற்படுத்தப்பட்டோருக்கு, மூன்றாவது பந்தி சிறுபான்மை சமூகத்துக்கு, கடைசி பந்தி அனைவருக்கும் சமபந்தி என்றால், மிச்சம் இருப்பவர்கள் எங்கே போவார்கள்? தாழ்த்தப்பட்டோர் பற்றியும், பிற்படுத்தப்பட்டோர் பற்றியும், சிறுபான்மையினர் பற்றியும் அக்கறை காட்டுவதற்கும், அவர்களுக்காக போராடுவதற்கும் எண்ணற்ற அரசியல் கட்சிகள், அமைப்புகள் உள்ளன. ஆனால், உயர் சாதியினர் என்று கருதப்படுவோருக்கு கவலைப்படவும், அவர்களுக்கு வழிகாட்டவும் யாரும் இல்லை.

அப்படியென்றால் அவர்களெல்லாம் இந்த அரசாங்கத்தின் பிள்ளைகள் இல்லையா? அவர்களுக்கும் இந்நாட்டில் சமமாக வாழ உரிமை இல்லையா? ஏன் அவர்கள் பிரச்சினையை மட்டும் யாரும் கண்டுகொள்வதில்லை. ஒதுக்கீடு என்பதை சாதி, மத அடிப்படையில் பார்ப்பது முற்றிலும் தவறு. உயர்ந்த சாதியிலும், மத்திய சாதியிலும், தாழ்த்தப்பட்டோர் என்று கருதப்படும் சாதியிலும் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள், அடிமட்டத்தில் இருப்பவர்கள் என அனைவரும் கலந்து இருக்கிறார்கள். உயர் சாதியினர் அத்தனை பேரும் பணக்காரர்கள் அல்ல, மற்ற சாதியினர் அத்தனை பேரும் ஏழைகள் அல்ல.

ஆக, ஒதுக்கீடு என்பது சாதி மத அடிப்படையில் இருத்தல் ஆகாது. இப்படியொரு சூழலில் தான் படித்தும் சொந்த நாட்டில் பலன் கிடைக்காமல் பலரும் மேலை நாடுகளுக்கு பறக்கிறார்கள். இதனால் திறமையானவர்களின் பங்களிப்பு பல சமயங்களில் இந்தியாவுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது.

இந்தியா வல்லரசாக வேண்டும் என்றால், எங்கோ இருக்கும் சந்திரனுக்கும், கண்ணுக்கு தெரியாத இன்ன பிற கிரகங்களுக்கும் பல கோடி செலவில் ராக்கெட்டுகளை அனுப்புவதை விட்டுவிட்டு இங்கே உங்கள் கண்முன் வேரூன்றி நிற்கும் சாதி பாகுபாடுகளை அறவே ஒழிக்க வேண்டியது அவசியம். அனைவரும் சமம் ஆக வேண்டும். பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களை சலுகை கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும்.

- ஆர்.ஒய்.ஸ்ரீ நந்தினி, அரசு பள்ளி மாணவி, கோட்டார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com