வேலூர் அருகே, கோட்டை அகழி கழிவுகளை ஏரியில் கொட்டிய லாரிகள் சிறைபிடிப்பு

வேலூரை அடுத்த சித்தேரி ஏரியில் கோட்டை அகழி கழிவுகளை கொட்டிய லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
வேலூர் அருகே, கோட்டை அகழி கழிவுகளை ஏரியில் கொட்டிய லாரிகள் சிறைபிடிப்பு
Published on

வேலூர்,

வேலூர் கோட்டையை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அழகுப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக கோட்டை அகழி தூர்வாரப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள நவீன மிதவை எந்திரத்தில் பொக்லைனை நிறுத்தி அகழியில் உள்ள சகதிகள், முட்புதர்கள் அகற்றப்படுகிறது.

இங்கிருந்து அகற்றப்படும் கழிவுகள் வேலூரை அடுத்த சித்தேரி ஏரியில் கொட்ட முடிவு செய்துள்ளனர். அதன்படி, கோட்டை அகழியில் இருந்து அகற்றப்பட்ட கழிவுகளை 3 லாரிகளில் ஏற்றிக்கொண்டு சித்தேரி ஏரியில் கொட்டினர். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இரண்டாவது முறையாக கழிவுகளை ஏற்றிக்கொண்டு சித்தேரி ஏரிக்கு லாரிகள் சென்றன. இந்த லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சித்தேரி ஏரி 450 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகவும், இந்த ஏரி நிரம்பினால் ஆவாரம்பாளையம், அரியூர், பென்னாத்தூர், சித்தேரி, துத்திப்பட்டு உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள், விவசாய நிலங்கள் பயன்பெறும். இந்தப்பகுதியில் 12 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

எனவே, இந்த ஏரியில் கழிவுகளை கொட்டினால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நிலத்தடி நீரும் பாதிக்கப்படும். எனவே, இங்கு கழிவுகளை கொட்டக்கூடாது என்று பொதுமக்கள் கூறினர். அதன்படி கழிவுகளை கொட்டாமல் திரும்பிசென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com