மணல் குவாரி அமைக்காததை கண்டித்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்காததை கண்டித்து, தேர்தலை புறக்கணிக்கப் போவதாக மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மணல் குவாரி அமைக்காததை கண்டித்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு
Published on

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்ட மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். சங்கத்தின் தலைவர் பாலமுருகன், துணைத் தலைவர் தனவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க ஆலோசகர் கணேசன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், மீன்சுருட்டி சங்க செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் பஞ்சாபிகேசன் ஆகி யோரும் பேசினர்.

கூட்டத்தில், தா.பழூர் பகுதியில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணலை அள்ள வசதியாக குவாரி அமைக்க அரசு தாமதப்படுத்தி வருகிறது. மற்ற மாவட்டங்களில் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. ஆனால், அரியலூர் மாவட்டத்தில் மட்டும் மணல் குவாரி அமைக்கப்படவில்லை. ஆனால், இரவு நேரங்களில் லாரிகளுக்கு மணல் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கு அரசு அதிகாரிகள் உறுதுணையாக இருக்கின்றனர்.

ஆகவே, கொள்ளிடம் ஆற்றில் மணல்குவாரி அமைக்காவிட்டால் வருகிற 25-ந் தேதி மணல் மாட்டு வண்டி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் குடும்பத்தோடு வந்து குடியுரிமை ஆவணங்களை தாசில்தாரிடம் ஒப்படைப்பது, வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ராஜேந் திரன் வரவேற்றார். முடிவில் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com